கந்துவட்டியை விடக் கொடுமையானது ஜிஎஸ்டி – ஸ்டாலின் பேச்சு, மக்கள் வரவேற்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் தமிழக அரசு உள்ளதாகக் குறிப்பிட்டார். கந்துவட்டியை விட மிகவும் கொடுமையான விஷயமாக ஜிஎஸ்டி வரி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா, ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்தால் வேதனை ஒன்றே மிஞ்சுவதாகத் தெரிவித்த அவர், சிறு சிறு விவகாரங்களுக்குக் கூட மக்கள் நீதிமன்றத்தையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டக் களத்தில் குதித்துள்ள நிலை வேதனைக்குரிய விஷயம் என்றார்.

நூறு ரூபாய்க்குப் பத்து ரூபாய் வட்டி வாங்கினால் கந்துவட்டி, அதே நூறு ரூபாய்க்கு 28 ரூபாய் வாங்கினால் அது ஜிஎஸ்டி என்று பொதுமக்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில், கந்துவட்டியை விடக் கொடுமையானது ஜிஎஸ்டி என்று ஸ்டாலின் பேசியிருப்பது மக்களிடையே வரவேற்புப் பெற்றிருக்கிறது.

Leave a Response