ஸ்பைடர் – விமர்சனம்

கதையே இல்லாமல் படமெடுக்க முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் அதை மக்களால் பார்க்கமுடியவில்லை என்பது வேறு விசயம்.

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கத் துறையில் வேலை செய்துகொண்டே. சட்டத்தை மீறி மக்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் வேலையைச் செய்கிறார் கதாநாயகன்.

வெட்டியான் தொழில் செய்யும் அப்பாவுக்கு வேலையில்லை அதனால் வருமானமில்லை என்பதால் கொலை செய்யத்தொடங்கும் சிறுவன், வளர்ந்து கொடிய வில்லனாகிறான்.

இப்படி அடிப்படையிலேயே தவறான இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு அதற்கு சரியான திரைக்கதையும் இல்லாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் ஒரு காட்சி கூட உண்மையாக இல்லை.

ஆந்திராவின் ஒரு நகரத்தில் தமிழ்த்தொலைக்காட்சித்தொடரை அதிகம் பேர் பார்க்கிறார்கள், அவர்களில் சில பெண்களைத் தேர்ந்தெடுத்து வில்லனை வளைப்பதாக அமைக்கப்பட்ட காட்சி எவ்வளவு அபத்தம்.

வில்லன் எஸ்.ஜே.சூரியா, மெட்ரோ ரயில் தூண்களில் மனிதர்களைப் புதைத்தார் என்று அவர் சொல்லும்வரை யாருக்கும் தெரிவதில்லை என்பது எவ்வளவு பலவீனம்.

காவல்துறையின் துப்பாக்கியையே எடுத்து எஸ்.ஜே.சூரியாவைச் சுடுகிறார் நாயகன். சுடப்பட்ட நபர் என்ன ஆனார்? எங்கே போனார்? என்று காவல்துறை விசாரிக்கவே செய்யாதா?

அவ்வளவு பெரிய மருத்துவமனையில் ஒரேயொரு உதவியாளரின் உதவியோடு அவ்வளவு வெடிகுண்டுகளை எப்படிப் பொருத்தமுடியும்? வெடிகுண்டுகளைப் பொருத்த மருத்துவ உதவியாளர் ( வார்டு பாய்) என்ன உதவி செய்திருப்பார்?

நாயகியை மட்டுமின்றி அவரது அம்மாவையும் தவறானவராகச் சித்தரித்திருப்பது முறையா?

மகேஷ்பாபுவின் நட்சத்திர மதிப்பும், எஸ்.ஜே.சூரியாவின் நடிப்பும் இயக்குநர் முருகதாஸை ஓரளவு காப்பாற்றியிருக்கிறது.

ஒரு பெயர் பெற்ற இயக்குநருக்கு இது அழகல்ல.

Leave a Response