நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்திய “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கம் செப்டம்பர் 18 திங்கட்கிழமை மாலை 06 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.
மருத்துவர் இரவீந்தரநாத், தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் தாயப்பன், மருத்துவர் இளவஞ்சி, மருத்துவர் ம.மதிவாணன், சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி, சமூகப் போராளி சபரிமாலா இவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
முன்னதாக தங்கை அனிதாவின் உருவப்படத்திற்கும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் உருவப்படத்திற்கும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்யப்பட்டது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய மருத்துவர் மதிவாணன், கருத்தரங்கு பற்றி எழுதியுள்ள குறிப்பு….
நாம் தமிழர் நடத்திய நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துமா எனும் கருத்தரங்கில் பேசினேன்.
நீட் தேர்வு, ஐந்தாண்டுகள் என சிறப்புப் பயிற்சி எடுக்கும் பொருளாதார வலிமையுள்ள மாணவர்களே, பிராமண உயர்சாதி மாணவர்களே கல்வியில் நுழையவும், எளிய மக்கள் கல்வியில் வெளியேறவும் உள்ள வாய்ப்பைச் சொன்னேன்.
நீட் தேர்வும், மருத்துவக் கவுன்சில் விதிகளும் கிராம, நகர மருத்துவமனைகளில், அதி சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளில் மருத்துவர் பணியாற்றத் தேவையில்லாத சூழலை, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உ.பி பீகார் போன்ற சுகாதாரம் குலைந்த மாநிலமாகும் என்றும் சொன்னேன்.
நீட் ரத்து என்பதைவிட கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவரவேண்டும். எட்டு கோடித் தமிழர்கள் தேர்வு நடத்த, தன் மக்களுக்குக் கல்வி தரக்கூட உரிமை இல்லாத இழிநிலை அகல வேண்டும் என்றேன்.
பிரின்சு கஜேந்திர பாபு, மரு.ஜி.ஆர். ரவிந்திரநாத், பொன்ராஜ் நீட் தேர்வை நார்நாராய்க் கிழித்துப் போட்டார்கள்.
தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கும், அனிதாவுக்குமான எழுச்சியான வீரவணக்கத்துடன் துவங்கிய நிகழ்வில்,
தம்பிகளின் அரங்கம் அதிர்ந்த ஆரவாரத்துக்கு ஊடே அண்ணன் சீமான் நீட் டை இரத்து செய்வோம், அதிகார மாற்றமே தமிழின வாழ்வு என்று உரையாற்றினார்.
என்னைப் போன்ற எழுச்சிமிகுந்த இன உணர்வு மிக்க தம்பிகள், உறவுகள் நாம் தமிழராய் பெருங்கூட்டமாய்க் கண்டதில், தமிழின எழுச்சி உருவாகும் நாள் நெருங்கிவிட்டது என தெரிந்தது.
புரட்சிகர வாழ்த்துகள்.
தமிழின உறவுகள் அனைவருக்கும்.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.