
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய அரசியல் மேடையாகக் கமல் பயன்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதற்கேற்றாற்போல் நேற்றைய நிகழ்ச்சியில், பார்வையாளர்களுக்கு கமல் ஜோதிடம் பார்ப்பது போன்ற நிகழ்வு இருந்தது. அப்போது பார்வையாளராக அமர்ந்திருந்த பெண் ஒருவர் “கிளி ஜோசியம் போல கமல் ஜோசியம் தமிழ்நாட்டில் பிரபலம். அதை நம்பி என்னை மாதிரி நிறையப் பேர் காத்திருக்கிறோம். அந்த ஜோசியத்தில் நீங்கள் ‘ம்ம்ம்ம்ம்’ என்ற வார்த்தை மட்டும் சொன்னால் போதும். பேசவெல்லாம் வேண்டாம். ரெடி” என்றார்.
அதற்குக் கமல், “ஏற்கெனவே ட்விட்டர் தளத்தில் நான் பேசுவது புரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கலாம் என்றால் அனைவரும் கையைத் தூக்குங்கள்” என்று கூறியவுடன், பார்வையாளர்கள் அனைவரும் கையைத் தூக்கினார்கள்.
இப்படித் தூக்கக் கூடாது என (வாக்களிக்கும் விரலைக் காட்டியபடி) இப்படித் தூக்க வேண்டும் என்றார். “நேரம் வரும் போது இந்த விரலில் புள்ளி இருக்க வேண்டும். சிந்தித்து தெளிவாக இருக்க வேண்டும். கையில் மட்டுமே கறை இருக்க வேண்டும். வேறெங்கும் இருக்கக் கூடாது. அது தான் எதிர்காலம்” என்று பேசினார் கமல்.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வுக்கு மற்ற மாநிலங்கள் தயாராக இருந்தன.தமிழகம் தயாராக இல்லை அதனால் இவ்வளவு சிக்கல்கள் என்றும், கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு வரவேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.


