திரைப்படத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – நிறைய படப்பிடிப்புகள் இரத்து

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 31) நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். இதில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் ஆர்.கே.செல்வமணி,ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்த் திரையுலகம் இந்திய அளவில் உயர்வாக மதிக்கப்படுவதற்கு திறமையான பெப்சி தொழிலாளர்களின் உழைப்புதான் காரணம். திரைப்படத்துறை சிறப்பாக இருப்பதற்காகப் பல சலுகைகளை பெப்சி தொழிலாளர்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பிரச்சினைகள் வந்தபோதும் பக்கபலமாகவே இருந்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பெப்சியை அழிப்பதுபோல் இருப்பதாக அச்சப்படுகிறோம். பெப்சிக்கு போட்டியாக திரைப்படத்துறையில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து விளம்பரம் கொடுத்து இருக்கிறது.

இருக்கிறவர்களுக்கே வேலை இல்லாதபோது, புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். பெப்சிக்கு எதிராக இன்னொரு அமைப்பை உருவாக்குவது வேதனை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பெப்சி தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

உள்ளுர் படப்பிடிப்புகளும், வெளியூர் படப்பிடிப்புகளும் நடைபெறாது. திரைப்பட தொழில்நுட்பப் பணிகளும் நிறுத்தப்படும். வேலைக்கு புதிதாக ஆட்கள் எடுக்கும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப் பெறும் வரை இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.

முதல்-அமைச்சரையும், தொழிலாளர் நலத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்துப் பேச இருக்கிறோம். வருகிற 5-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் வேலை நிறுத்தம் வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தார். வேலை நிறுத்தத்தைத் தவிர, வேறு எங்களுக்கு வழி இல்லை. இதற்காக அவரிடமும் மற்ற புதிய தயாரிப்பாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது பெப்சி தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.

இந்தப் போராட்டத்தால் ரஜினி நடிக்கும் காலா உட்பட நிறையப் படங்களின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

Leave a Response