
இந்தியாவின் மகள்” படம் பார்த்து 3 மணி நேரம் ஆகிவிட்டது.. இன்னும் பதட்டம் அடங்கவில்லை.. உள்ளே ஒரு சொல்லமுடியாத அழுத்தம் பரவிக்கிடக்கிறது.. மகளை பெற்றவன் அந்த மகள் மேல் கொள்ளை பாசம் கொண்டவன் என்பதால் இன்னும் அதிகமாக அழுத்துகிறது… இப்படியான மனிதம் கொஞ்சம் கூட இல்லாத சமூகத்திலா என் மகளை நான் உலாவவிட போகிறேன் என்று நினைக்கையில் உடம்பெல்லாம் நடுங்குகிறது.. ஜோதியின் தாயின் கண்ணீர் என்னை இன்று தூங்கவிடாது.. என் கைகளில் தவழ்ந்த ஜோதிக்கு நானே நெருப்பு மூட்டினேன் என்று அந்த தந்தை கைகளை பிசைகையில் மனம் பிசகிப்போனது..
ஜோதியையும்.. ஜோதியின் கனவுகளையும் நொடிகளில் குடியின் உச்சத்தில் பொசுக்கிவிட்டு ‘ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை வராது, 9 மணிக்கு மேல் நல்ல பெண்கள் வெளியில் நடமாட மாட்டார்கள்’ என்றெல்லாம் கலாச்சார பாடம் எடுக்கையில் உச்சி முதல் அடி வரை எரிகிறது.. ஒழுக்க விழுமியங்களை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி ஆயிரம் கதைகள் சொல்லப்படும் இந்நாட்டில் எங்கிருந்து இவ்வளவு மோசமான போதனைகளை இவர்கள் கற்றார்கள் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை… கற்பழிக்கப்படும் பொழுது எதிர்பெதையும் காட்டாமல் அமைதியாக பெண்கள் இருக்கவேண்டும் என்று சொல்லும் மிருகங்கள் நம்மை சுற்றி நடமாடுவதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.. என் மகள் இப்படி ஒரு தவறு செய்தால் நான் என் வீட்டார் முன்னால் என் பண்ணை வீட்டில் அவளை எரித்துக்கொல்வென் என்று சொல்லும் மனநிலை உள்ள மனிதரை கொண்ட இந்தியா கலாச்சாரம் மிளிரும் நாடு மயிரு மட்டை என்றெல்லாம் இனி எவனும் சொல்லாதீர்கள்..
பண்பாடற்ற முறையற்ற விதிகளற்ற கொஞ்சமும் குற்றவுணர்வற்ற மனிதர்களை உருவாக்கும் தற்கால சமூக நிலையும் கல்விமுறையும் கொண்ட நாட்டை சட்டம் கொண்டு எக்காலத்திலும் திருத்த முடியாது.. கொலையாளிகளை தூக்கில் போடுங்கள் என்று கூச்சலிடுவதில் ஒரு துளியும் பயனில்லை.. மனிதம் துளிர்க்காமல், அடிப்படை தத்துவம் மாறாமல், மனங்கள் மாறாமல், எதையும் மாற்ற முடியாது திருத்த முடியாது..
# ஒரு ‘ஜோதி’ என் வீட்டிலும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறாள்.. ஒரு ‘ஜோதி’ உங்கள் வீட்டிலும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.. எல்லோர் வீட்டிலும் மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக ‘ஜோதி’கள் இருக்கிறார்கள்.. அணையாமல் ஜோதிகளை காப்பதற்கேனும் அன்பையும் மனிதத்தையும் நோக்கிச் செல்லும் சமூக மாற்றத்திற்கு நாமெல்லோரும் பங்களிப்போம். -சே.பாக்கியராசன்


