
சென்னை கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது என பா.ம.க நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டிய நடிகர் திலகத்திற்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அவரது நினைவுநாளான ஜூலை 21-ஆம் தேதி கடற்கரை சாலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போதே இச்சிலையால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில், அந்த சிலையை சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரைச் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராசர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவ்வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என பகிரங்கமாக குற்றஞ்சாற்றுகிறேன்.
சிவாஜி சிலையை அகற்றுவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு விட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி & காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
