ஓவியா ஏன் மனநலம் குன்றியவராக நடிக்க மறுத்தார் ?

பிக் பாஸ் மனநலம் குன்றியவர்களைக் கேலிப்பொருளாக்கிகொண்டிருக்கிறது். தன்னுணர்வுடன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களை, ஒடுக்கப்படும்- புறக்கணிக்கப்படும் சமூகமாக இருக்கக்கூடியவர்களைக் கேலிச்சித்திரமாக்குவது வன்மைமையாக் கண்டிக்கத்தக்கது.

‘ பைத்தியம்’ என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் விதம் மனநலம் குன்றியவர்கள்மீதான பல்வேறு அநீதிகளுக்குக் காரணமாகிறது. நவீன மனித உரிமைக் கோட்பாடுகள் இந்த பிம்ப உருவாக்கத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன. மன நலம் குன்றியவர்களை இழிவுபடுத்தும்சொற்கள் எல்லாம்கூட மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் நம் பொதுப்புத்தியும் அது சார்ந்த ஊடகங்களும் மாறவே இல்லை. மன நலம் குன்றியவர்களைக் கொடூரமானவர்களாகவோ அல்லது கேலியாகவோ தொடர்ந்து நம்முடைய திரைப்படங்கள் சித்தரித்து வந்திருக்கின்றன.

நான் மனநலம் குன்றியவர்களின் அருகில் இருந்திருக்கிறேன். நானே அதன் விளிம்பிற்கு பலமுறை சென்று மீண்டிருக்கிறேன். அது மனம் கசியச்செய்யும் ஒரு துயரம். என் கவிதைகளில் அதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. ஒரு முறை பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவர் பிறகு நலமடைந்தால்கூட சமூக வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் போவதற்கு இதுபோன்ற மதிப்பீடுகள் காரணமாக இருக்கின்றன.

நேற்று ஓவியா இந்த ‘ பைத்திய’ விளையாட்டில் பாதியிலேயே பங்கேற்க மறுத்து விலகிவிட்டார். காதல் தோல்வியடைந்த பைத்தியமாக நடிக்கக் கஷ்டமாக இருக்கிறது என்பதுதான் அவரது வாதம். மன நலம் குன்றியவர்களைக் கேலி செய்வதை ஏற்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
என்ன செய்வது ஸ்ரிப்டில் இல்லையே.

-மனுஷ்யபுத்திரன்

Leave a Response