மர நடுகை மாதமாக நவம்பர்

வடமாகாண விவசாய அமைச்சினால் நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதி மாகாண மர நடுகை மாதமாக அறிவிக்கப்பட்டதற்கிணங்க இன்றைய தினம் நாரந்தனை பகுதியில் வடமாகாண முதலமைச்சரினால் மர நடுகை மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி மர நடுகை திட்டம் வடமாகாணம் முழுவதும் இம்மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், மாகாண விவசாய அமைச்சர், மாகாணசபை அவைத்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு மர கன்றுகளை நாட்டிவைத்தனர்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினர் உரையினை நிகழ்த்தினார். அவருடைய உரையின் முழுமையான வடிவம் பின்வருமாறு,

இன்று முக்கியமான ஒரு கைங்கரியத்தினுள் உள் நுழைகின்றோம். மழைக்காலம் வந்துள்ளதால் எமக்கு மிக அத்தியாவசிமாக வேண்டியதான மரங்களை நட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

கடந்த சில வருடங்களாக எமது மழைவீழ்ச்சியில் பின்னடைவைச் சந்தித்து வந்துள்ளோம். அதற்கான முக்கியகாரணம் எம்மால் தறித்து, வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட பல நீண்டகால மரங்களே. முன்னெல்லாம் ஏ-9 வீதியால் நாங்கள் வரும் போது அடர்ந்த காடுகள் தெருவின் இரு பக்கமும் இருப்பதைக் காணலாம். வானளாவும் மரங்களைக் கண்டு எம் மனங்கள் குதூகலிப்பன.

இப்பொழுதோ நிலைமை மாறிவிட்டது. மரங்கள் பல தறித்துவெட்டி எடுத்துப் போயாகி விட்டது. போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்டமரங்களாக்கிவிட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவமுகாம்களும் அத்துடன் அவர்கள் கொண்டுவந்து குடியேற்றிய அன்னியர்களும் குடியிருக்கின்றார்கள்.

குடிமக்கள் செலவில் குளிர்காய்கின்றார்கள் அவர்கள். எனவே நாம் எமது வன மரங்களின் செறிவை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அழிக்கப்பட்டமரங்களுக்கு ஈடாகப் புதிய மரங்களை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அரசாங்கம் நவம்பர் 15ந் திகதியை தேசிய மரம் நாட்டு நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. நாமோ இந்த மாதம் முழுவதையுமே மரம் நடுகை மாதமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். எம் வரலாற்றில் இம்மாதத்திற்குரிய பக்குவத்தை மரம் நாட்டிப் பறைசாற்றுகின்றோம். பன்னிருகரனின் பதம் பார்த்துப் பணிகின்றோம். மறைந்த மனிதர்கள் போலாம் மறுத்தொதுக்கப்பட்டமரங்களும்.

மறுபடியும் மரங்கள் யாவும் மிகுந்திருக்க மரநடுகையில் மதர்த்துநிற்கின்றோம். நாங்கள் மரம் நாட்டுகையில் சில பல விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். எப்பேர்ப்பட்ட மரம் ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குஞ் சூழலுக்கும் பொருத்தமாகும், எம் மரத்தை வளர்ப்பதால் அங்கு வாழ் மக்களுக்கு அதுமிக அதிக நன்மைபயக்கும், பழவகை மரங்களா, நிழல் தருமரங்களா அல்லது விறகுக்கு உதவுந் தருக்களா உசிதமானது என்பதை முதலில் தீர்மானிக்கவேண்டும்.

பின்னர் நாட்டியமரத்தைப் பராமரிப்பது எப்படி,யார் நீரூற்றுவது, நாடிச் செல்லும் மாட்டுக் கூட்டங்களிடம் இருந்து அதனைப் பாதுகாப்பது எப்படி, அம் மரத்தின் விபரங்கள் விவரப் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்த்து முறையான தீர்மானத்தை நாங்கள் எடுக்கவேண்டும்.

எம்மைச் சுற்றியுள்ள தாவரங்களாவன பறவைகள், மிருகங்கள், மற்றும் ஜந்துக்கள் பலவற்றிற்கு வாழ்விடங்களாக அமைவதை நாம் மறத்தல் ஆகாது. மனிதன் மரந்தறித்து, நிலத்தில் மண் நிரப்பி, மாடமாளிகைகள் அமைப்பதால் அவன் சுயநலத்துடன் வாழலாம்.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு அவன் பகைவன் ஆகின்றான் என்பதைநாம் மறத்தல் ஆகாது. இதனால்த் தான் பலர் பல் விதபாரிய தொழில் அகங்களைத் தோற்றுவிக்க எம்மை நாடி வந்திருந்தாலும் நாம் மிகக் கவனமாக அவதானமாக அவற்றின் சுற்றுச் சூழல் பாதிப்பைப் பற்றிக் கவனித்துப் பார்த்தே உள்வர உதவுகின்றோம்.

பாரிய தொழில் அகங்கள் பலருக்கு வாழ்வாதாரங்களை வழங்குவன என்பது உண்மைதான். ஆனால் குறுகியகாலநலன்களையேகுறியாகவைத்துவருங்காலச் சந்ததியினரை நாம் வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது.

ஏற்கனவே எமது நிலங்கள், சுற்றுச் சூழல், நிலத்தடிநீர் ஆகியவை மாசடைந்துள்ளன. உதாரணத்திற்கு மின்சாரம் வேண்டுமென்றதால் பாரிய எண்ணைத் தேக்கக் கிடங்குகளைச்சுண்ணாகத்தில் வடிவமைத்ததால் இன்று எண்ணையானது நிலத்தினுள் கசிந்து சென்று சுண்ணாகத்தில் மட்டுமல்லமல்லாகத்திற்கு அப்பாலும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது.

நிலத்தின் அடியில் மாசுடன் வாழ்வது நிந்தைக்குரிய ஒருநிலை. நிபுணர்கள் உதவியுடன் ஒரு நிரந்தரத் தீர்வு இந்த நிலத்தடிமாசுக்கு நாம் காணவேண்டும். மரங்களை நாட்டுவதால் நாம் அடையும் பயன் பல இருக்கின்றன.

சுற்றுச் சூழலில் உள்ள ஒலி இரைச்சலைத் தணிக்கவல்லன மரங்கள். இதுவரைக்கும் எம்மை வாகன ஓசைகள் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. இப்பொழுது வாகன இரைச்சல் மாசானது மெல்ல மெல்ல யாழ்ப்பாண நகரப் புறத்தைக் கவ்விவருகின்றது. மரங்களைப் போதுமானதாக நாட்டி வைப்பது வாகன இரைச்சல் காதைத் துளைப்பதைக் கட்டுப்படுத்தும்.

மரங்கள் உயிரியமான பிராணவாயுவை உற்பத்தி செய்கின்றன. சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்துகின்றன. சுகமான சூழலை உண்டு பண்ணுகின்றன. சுழன்றுவரும் பேய்க்காற்றைத் தடைபோட்டு நிறுத்துந் தகைமை மரங்களுக்குண்டு. மேலும் மழைக்காலங்களில் மண் அரிப்பைத் தடைசெய்வதும் மரங்களே.

எனவே இம்மாதம் மரம் நடும் மாதமாகமாற்றப்பட்டமை இம்மாவட்ட, ஏன் மாகாண மக்களுக்கு மகத்தான ஒருவரப்பிரசாதமாக அமையப் போகின்றது. எமது சிறுபராயத்தினருக்கு மரம் நாட்ட வேண்டிய அவசியம் பற்றி மனதில் உறையும் வகையில் நாம் எடுத்துக் கூற வேண்டும்.

ஒரு பெரியவர் தமது தள்ளாத வயதில் ஒரு மாங்கொட்டையைத் தன் தோட்டத்தின் ஒருபக்கத்தில் நாட்டிக் கொண்டிருந்தார். அவரின் பேரன் அவரிடம் “தாத்தா! ஏன் அதை நாட்டுகின்றாய்”என்றுகேட்டான். “மரம் வளர்ந்தால் மாங்கனிகள் கிடைக்கும். அதற்காகத்தான்”என்றார் பெரியவர். உடனேசிரித்தான் பேரன்.“என்னதாத்தா! இந்த வயதில் மாங்கன்றுநாட்டி அதன் மாங்கனியை நீசாப்பிடப் போகின்றாயா?”என்றுகேட்டான்.

“இதுநான் சாப்பிடஅல்ல! நீசாப்பிட”என்றார் பெரியவர். அந்தச் சின்னஞ்சிறிய பேரனுக்கு வாய் அடைத்துவிட்டது. “என் பேரனே! அன்று என்னுடைய பாட்டனார் தனக்கு மட்டும் மாங்கனி கிடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நான் இன்றுமாம்பழம் சாப்பிடமுடியுமா? நாம் மரம் நாட்டுவது எமக்கல்ல. எமது வருங்கால சந்ததியினருக்கு.

எனவே மரநடுகை என்பது வெறும் மரங்களை நாட்டும் ஒருகாரியம் மட்டுமல்ல. மனிதர்களை வாழவைக்கும் ஒருபுனிதக் கைங்கரியம். வருங்காலத்தை வளமுள்ளதாக அமைக்க எடுக்கப்படும் வலுவான ஒரு நடவடிக்கை. வரும் சமுதாயம் சுயநலமின்றிசுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தி சுகமான வாழ்வை சுற்றத்தார்க்கு அமைத்துக் கொடுக்க வழி வகுக்கும் ஒரு உத்தமப் பணி.

சுயநலம் மறந்து பொது நலம் மலர நாம் மேற்கொள்ளும் சுரணையான கைங்கரியம் இது. உங்கள் கைகளில் தவழும் “ஆளுக்கொருமரம் நடுவோம். நாளுக்கொருவரம் பெறுவோம்” என்ற சிறு பதிப்பில் ஒரு கிரேக்கப்பழமொழி இடம் பெறுகின்றது.

அப் பழமொழி எமக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் ஒருமுறை அதைக் குறிப்பிடுகின்றேன். “தன்னால் அந்தமரத்தின் நிழலில் ஒருபோதும் உட்காரமுடியாது என்று தெரிந்தும் மரங்களை நாட்டும் முதியவர்களைக் கொண்ட சமூகம் மிகப் பாரிய அளவில் வளர்ச்சியடையும்”.

இன்று எம் மக்களுக்கு வேண்டிய மிகப் பெரிய ஆற்றல் அல்லது ஆளுமை தன்னலம் மறந்து தரணிநலம் பேணல். அதுவும் தம்மக்கள் தடையறாது வாழ்ந்த இந்தத் தமிழ்ப் பேசுந் தரணி நலம் பேண! எம் வடமாகாணம் பலவித சோதனைகளையும் சோர்வுகளையும் சோகைகளையும் எதிர் நோக்கியிருக்கின்றது. அவற்றைஎல்லாம் போக்கவல்லது நாம் சுயநலம் களைந்து பொதுநலங்கருதி வாழும் வாழ்க்கை .அவ்வாழ்க்கைக்கு உர மூட்டக் கூடியது இந்தமரம் நடும் மாண்பாகும்.

Leave a Response