செம்மொழி நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது – ஆட்சிக்குழு தீர்மானம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு ஜூலை 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 5-ம் ஆட்சிக் குழு, முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாடுக்குள் கொண்டு செல்ல இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தமிழின் மேன்மையை ஆராய்ச்சி மூலம் உலகுக்கு வழங்கும் இந்த நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது. மேலும், தன்னாட்சி அமைப்பையும் இந்த நிறுவனம் எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கு என புதுப்புது திட்டங்களை செயல்படுத்துவதுடன், தமிழ் இலக்கிய உயராய்வை மேலும் செம்மைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஆட்சிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம், மத்திய உயர்கல்வித் துறை செயலர் சுக்பீர் சிங் சாந்து, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ஆர்.வெங்கடேசன், குப்பம் – திராவிட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இ.சத்திய நாராயணா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response