என் கதைக்கு ராதாமோகனுக்கு விருதா? – தமிழக அரசுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி

2009 – 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், தமிழ் திரையுலகினர் பலரும் பெரும் மகழ்ச்சியில் உள்ளனர்.

விருதுகள் அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

இவ்விருதுகள் தொடர்பான சர்ச்சைகளும் நிறைய வருகின்றன. அவற்றில் ஒன்றாக, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் கடிதம் அமைந்துள்ளது. அவர், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பான முகநூல் பதிவில்,,,

தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 2011ம் வருடத்தில் சிறந்த கதைக்கான விருது பயணம் திரைப்படத்திற்காக திரு.ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர் சிறந்த கதாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தக் கதைக்காக வழங்கப்படுவதில் எனக்கு மறுப்பிருக்கிறது.

படம் வந்ததுமே என்னுடைய பல ரசிகர்கள் போன் செய்து அது என் கதை என்று பேசினார்கள். இது நான் எழுதிய “இது இந்தியப் படை” நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற என் சந்தேகத்தை விரிவாக ராதா மோகனுக்கு கடிதம் எழுதினேன். உடன் என் கதையையும் இணைத்து அனுப்பி போனிலும் பேசினேன்.

கதையைப் படித்துவிட்டு ராதாமோகனும் என்னிடம் இரண்டு கதைகளிலும் உள்ள ஒற்றுமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.. அது குறித்து மீடியாவுக்கு ஒரு அறிக்கை வெளியிடுவதாகவும் சொன்னார். ஆனால் செய்யவில்லை.
ஆகவே நான் குமுதம் இதழில் என் மனநிலையையும் இரண்டு கதைகளிலும் உள்ள ஒற்றுமை குறித்தும் விரிவாக ஒரு கட்டுரை எழுதினேன்.

அப்படியிருக்க.. இந்த அறிவிப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வேதனைப்படுத்துகிறது.
அரசு இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response