விடுதலைப்புலி எழிலன் மனைவி அனந்தி சசிதரன் அமைச்சரானார் – விக்னேசுவரன் அதிரடி

வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று ஜூன்29-2017 காலை ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும், கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

சமூகசேவைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அனந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார்.எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது. ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார்.ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார்.

அனந்தி 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டு, இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் (87,870) பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார். இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இவரை அமைச்சராக்கியதன் மூலம் ஈழவிடுதலைக்கான குரல்களுக்கு வலுச்சேர்க்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Leave a Response