ரிலையன்ஸ் பாலில் கலப்படம் என்று சொல்வதால் நள்ளிரவில் மிரட்டுகிறார்கள் – அலறும் அமைச்சர்

தமிழகத்தில் விற்பனையாகும் தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்திருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கெட்டுப்போன பாலில் இருந்துதான் பால் பவுடர் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகச் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டினார். இதற்கு பால் முகவர்கள் மறுப்பு தெரிவித்தனர். ‘எந்தப் பாலிலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரசாயனம் இல்லை’ என ஆய்வில் தெரியவந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலகவேண்டும் என பால் முகவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்கள் சென்னையில் உள்ள மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கெட்டுப்போன பாலில் இருந்துதான் பால் பவுடர் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நெஸ்லே எவ்ரிடே, ரிலையன்ஸ் நிறுவன பால்பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.

அமிலம் அதிகமாகி கெட்டுப் போன பாலில் அமிலத்தன்மையை குறைக்க, காஸ்டிக் சோடா கலக்கப்படுகிறது. அமிலம் குறைந்ததும் அதை பால்பவுடராக மாற்றி விடுகின்றனர். அந்தப் பவுடரை மீண்டும் பாலாக்கி குழந்தைகளுக்கு மக்கள் கொடுக்கின்றனர். காஸ்டிக் சோடா கலந்த பால் பவுடரை உட்கொள்வதால் வயிற்றுக்கோளாறு, இருதய பிரச்சினைகள் உள்ளிட்ட நோய்கள் உண்டாகும்.

தனியார் பால் பொருளில் ரசாயனம் இல்லை என சிலர் கூலிக்காகப் பேசி வருகின்றனர். தற்போது ரசாயனம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். அதே நேரத்தில் ஆவின் பால் பொருட்கள் அனைத்தும் தரமானது என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து நல்ல பாலை வாங்க வேண்டும்.

நள்ளிரவில் தொலைபேசியில் மிரட்டல் வருகிறது. பெரிய நிறுவனங்கள் பற்றி நான் புகார் கூறுகிறேன். அதனால் அவர்கள் ஆள்வைத்து மிரட்டுகின்றனர். வெளிநாட்டில் இருந்து பேசுவதுபோன்று மிரட்டுகின்றனர். அதற்காக பயந்து பின்வாங்கமாட்டேன். பயம் என்பதையே நான் அறியாதவன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Response