சென்னை சில்க்ஸ் தீயையே அணைக்கமுடியவில்லை, அணுஉலை தீப்பிடித்தால்?


சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பெரிய துணிக்கடையில் ஏற்பட்ட தீயை கடந்த 7 மணி நேரமாக போராடியும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கீழ் தளத்தில் ஜெனெரேட்டர் கசிவால் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாதலால் முழு கட்டிடத்திற்கும் பரவி அந்த கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளது. அந்த கட்டிடத்தில் விரிசல் விழுந்து அந்த பகுதியை “ஆபத்தான பகுதி” என்று அறிவிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. கட்டிடங்கள் நெருக்கமாக இருப்பதால் தீயை உடனடியாக அணைக்க முடியாமல் போனதாக காரணம் சொல்லப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டவை என்று பலவருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டு, அவற்றை இடிக்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு கட்டிட விதிமீறல்களுக்கு விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்து இடிப்பதை நிறுத்தியது. அந்த தவறான முடிவு இன்றைக்கு இவ்வளவு பெரிய விபத்து நடக்க வழிவகை செய்துவிட்டது.

நாங்களும் இதை தான் சொல்கிறோம், இந்தியா மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள நாடு, இங்கே விபத்துகள் ஏற்பட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஒரு தீ விபத்தை கூட கட்டுப்படுத்தமுடியாத அரசு தான் அணு உலை விபத்திலிருந்து இத்தனை லட்சம் மக்களை காப்பாற்றுமா என்று நாங்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசின் “திறமை” வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

Leave a Response