கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்…சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டரைகளும்…

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை 30.01.2015அன்று இரவு உடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இல்லை,இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போல் கடந்த 18.03.2014 அன்று ஈரோடை மாவட்டம் பெருந்துறை தொழிற்பேட்டையில்,சாய ஆலை கழிவுநீரை தூய்மைப்படுத்தும் ஆலையில் உள்ள தூய்மைப்படுத்தும் தொட்டியில் உள்ள குழாய் வாழ்வில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய முயன்ற ஏழு தொழிலாளர்கள் கழிவுநீர் குழாய் மூலம் வெளியேறிய நச்சுவளியால் இறந்துள்ளனர்… இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபோன்றச் சாவுகள் (படுகொலைகள்) இது முதல்முறையல்ல, ஏற்கனவே தமிழகத்தில் இதுபோல் பலமுறை நடந்துள்ளது. ஈரோடை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சாய ஆலை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் 100 பேர் வரை இறந்துள்ளனர்.

ஒருவர் இருவர் என சாவு இருந்தால் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுவதும், இடர்தொகை என்ற பெயரில் ஏதோ சிறிது தொகை கொடுத்து செய்தியே தெரியாமல் மறைத்து வருகின்றனர். இப்படுகொலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்

இறப்புக்கு உள்ளான பலரும் வடமாநிலங்களை சார்ந்தவர்களாகவும் மற்றும் வெளி மாவட்டம் சார்ந்தவர்களாகவும் இருப்பதாலும், இவர்களுக்கான தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக இல்லாமல் இருப்பதால் இப்படுகொலை யாரும் கேட்பாரின்றி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகமெங்கும் தோல் ஆலை, சாய ஆலை, உட்பட பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் விசவாயு (நச்சுவளி) தாக்கி 800 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது.

நம் தாய் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

தோல் என்பது மனிதன் எப்போது விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினானோ, அப்போது முதல் விலங்கின் இறைச்சியினை உணவாக உண்டுவிட்டு, தோலைப் பதப்படுத்தி, தனது பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தான்.

ஈரோடையில் இன்று செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், 1990களுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம்பட்டை, கடுக்காய் கொட்டை, பெருநெல்லி கொட்டை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை முதன்மையாக வைத்தே பயன்படுத்தினார்கள். இந்த முறையில் தோலைப் பதப்படுத்த 40 நாட்கள் வரை தேவைப்படும்.

தோலைப் பதப்படுத்திய பிறகு வரக்கூடிய கழிவுகள், வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் எருவாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு” என்ற உணவு சுழற்சியாக உழவர்கள் தோல் கழிவுகளை எடுத்துச் சென்று தனது காட்டில், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி எருவாக போடுவார்கள். தென்னை உட்பட அனைத்து மரங்களிலும் காய்பிடிப்பு (காய்ப்பு) மிக நன்றாக இருக்கும்.

ஆனால் இன்று ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்பதுதான் எதார்தமான உண்மை.

வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப் புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர் வாகம் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின், அதன் காசுக்கு விலை போன அதிகாரிகளின் அலட்சியமே உண்மையில் விபத்துக்கு காரணம்

சாயத்தொழில், துணிகளுக்கு சாயம் ஏற்றுவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொழிலாளாகும். ஆனால் 1990 வரை சாயப்பட்டறை கழிவுகளால்மனிதர்களுக்கு எவ்வித இடரும் ஏற்பட்டது இல்லை. நீர்நிலைகள் நாசமானது இல்லை. விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது இல்லை. ஆறுகள், குளங்கள், ஏரிகள், செத்துப் போனது இல்லை. ஏனெனில் அப்பொழுதெல்லாம் சாயத்தொழிலுக்கு மரபு சார்ந்த பொருட்களை குறிப்பாக மஞ்சள் போன்றவற்றை வைத்து பயன்படுத்தப்பட்டது. வேதியியல்(ரசாயனம்) வைத்து உருவாக்கப்பட்ட சாயப் பொருட்கள் பயன்பாடு என்பது அறவே இல்லை.

5000 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட, நெடிய நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையை கடவுளாக வணங்கும் தமிழகம் இன்று வெளிநாட்டுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்தியஒன்றிய அரசின் புதிய பொருளியல் கொள்கை என்ற பெயரால் போடப்பட்ட GATT (காட்) ஒப்பந்தப்படி கட்டற்ற முறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைக்காக நாடு திறந்து விடப்பட்டது.

இதன் விளைவாக சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாற்றப்பட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது முதன்மையாக மாற்றப்பட்டது. விரைவான உற்பத்திக்காக தோல் தொழிற்சாலைகளிலும், சாயத்தொழிலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக இன்று எண்ணற்ற பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.

திருப்பூர் சாயஆலைக் கழிவுகளால் வரலாற்றுப் புகழ்பெற்ற காவிரியின் துணைஆறான நொய்யல் ஆறு செத்தே போய் விட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992ல் கட்டி முடிக்கப்பட்ட ஒரத்துப் பாளையம் அணையில் சாய ஆலையின் கழிவுநீர் தேங்கியது. இதனால் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீரால் அனைத்து வேளாண் நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து அனைத்து கிணறுகளும், ஆழ்குழாய் கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. மேலும்

நொய்யல் ஆற்றுநீர் செல்லும் வழித்தடத்தில் சாய ஆலை கழிவுநீர் செல்வதால் ஆற்றின் இருகரையிலும் உள்ள கிணறுகளும், ஆற்றில் நீர் செல்லும் போது பலகல் தொலைவு வரை உள்ள அனைத்து கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. இதனால் உழவர்கள் ஆற்றில் தண்ணீரைத் திறந்து விடாதே என போராடி 1996முதல் நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை திறக்கப் படாமலேயே இருந்தது.

அணை திறக்கப்படாததால் ஒரத்துப்பாளையம் அணையை சுற்றியுள்ள எண்ணற்ற சிற்றூர்களும், வேளாண் நிலங்களும் பாழாய்ப் போய்விட்டது. சாயச்சாலை கழிவுநீரால் நொய்யல் ஆறு காவேரி ஆற்றுடன் கலக்கும் கரூர் மாவட்டம் புகளூர் வரை ஆற்றின் இருபக்கம் உள்ள நிலத்தடி நீர் மாசடைதல், குளங்கள் மாசடைதல் என அனைத்து நீராதாரமும் கெட்டு விட்டது. இது எப்போது, எத்தனை ஆண்டுகளில் இயல்பான நிலை அடையும் என்பது தெரியாத நிலையே உள்ளது.

மக்களின் தொடர்ந்த போராட்டத்தால் அரசு தற்போது அறமன்றத் தீர்ப்புப்படி ஒரத்துப்பாளையம் அணையை சுற்றி உள்ள நிலங்களும், இந்த நீரைப் பயன்படுத்தி பாசனம் செய்த நிலங்களுக்கும் வேளாண் செய்ய முடியாததற்காக ஒரு சிறுதொகையை நட்ட ஈடு கொடுத்து வருகின்றது. சாய ஆலை கழிவுநீரால் ஒரு ஆறு செத்துப் போன வரலாற்றுக் கொடுமை இங்குதான் நடந்தது.

மிகப்பெரிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் கூறி சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் உழவர்களிடம் இருந்து 2700 குறுக்கம் (ஏக்கர்) நிலம் பிடுங்கி எடுக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ உலகில் முன்னேறிய நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சிகப்பு வகை ஆலைகளான தோல் தொழிற்சாலை, சாய ஆலை, இரும்பு தொழிற்சாலை, கல்நார் (ஆஸ்பெக்டாஸ்) தொழிற்சாலை, வேதியியல் தொழிற்சாலை போன்ற மிகவும் நாசகரமான தொழிற்சாலைகளே அமைக்கப்பட்டும், மிக அபாயகரமான நச்சுக்கழிவு மேலாண்மை தொழிற்சாலை அமைக்கவும் முயற்சி செய்கிறது.

பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல், சாய தொழிற்சாலைகள் மூலம் சென்னிமலை ஒன்றியத்தின் பெரும்பகுதியும், பெருந்துறை ஒன்றியத்தில் பல ஊர்களுடன் நீராதாரம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. சென்னிமலை ஒன்றியத்தில் 400 குறுக்கம் (ஏக்கருக்கு) மேல் நேரடி பாசனம் கொண்ட பாலதொழுவு குளம் முழுக்க நஞ்சாகி விட்டது.

ஓடைக்காட்டர் குளம், சுள்ளிமேடு குளம் உட்பட பல குளங்கள் சாயநீர் தேங்கும் இடமாக மாறிவிட்டன. மக்களுக்குப் புதிய புதிய எண்ணற்ற நோய்கள் ஏற்பட்டு வருகின்றது.

பெருந்துறை தொழிற்பேட்டைச் சுற்றி உள்ள நீராதார அழிவால் மக்களுக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட உள்ளூரில் கிடைப்பதில்லை.

கரூர் சாய ஆலைகளால் அமராவதி ஆறும், ஈரோடு – பள்ளிபாளையம் – குமாரபாளையம் சாய ஆலைகளால் காவேரி ஆறும் நஞ்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றது. தமிழகத்தின் 17 மாவட்டங்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் காவேரி ஆறுகளில் சாய ஆலை கழிவுநீர் கலந்து வருகின்றது.

-முகிலன்

 

Leave a Response