“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனாரின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்-சீமான் சூளுரை!


மொழியுணர்வையும் இன உணர்வவையும் உயிரெனக்கொண்டு வாழ்ந்தவரும்
நாம் தமிழர் கட்சியின் நிறுவனத்தலைவருமான‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 36வது நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப்பயனெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களது வாழ்வானது தமிழ்ப்பேரினத்தின் எக்காலத்தலைமுறைக்கும் முன்மாதிரியான ஒரு வரலாற்றுப்பாடமாகும். தமிழ்மறை திருக்குறளைப் போற்றி வளர்த்த அவர், ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற தமிழ்மறையின் வாழ்வியல் நெறிக்கிணங்கவே தனது வாழ்வினை வடித்துக் கொண்டு வாழ்ந்து மறைந்தவராவார். அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு ஓங்கிக் குரல்கொடுத்த ஐயா அவர்கள் தமிழ் இதழியல் உலகில் ஆற்றியப் பங்கு அளப்பெரியது. ‘தினத்தந்தி’ எனும் நாளேட்டினைத் தொடங்கி பாமரரும் பாரை அளக்கும் அளவுக்கு எளிய உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை மக்களிடம் வளர்த்தெடுத்தார். வெள்ளைய ஏகாதியபத்தியம் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் எவர்க்கும் அஞ்சாது நெஞ்சுரத்தோடு செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்தார்.

இந்தித்திணிப்புப் போரில் தானும் பங்குகொண்டு அதற்காகவே சிறைப்பட்டார். தமிழில் கையொப்பம் இடுதலையும், கையொப்பத்தின் தலையெழுத்தை தமிழில் இடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழர்களின் தொன்மவிளையாட்டுகளான கபடி, சிலம்பம் போன்றவைகளை அழியவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்கு அதனைக் கடத்துகிற பெரும்பணியினை தனது பேறெனக் கொண்டிருந்தார்.

பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழருக்கென்று ஒரு தேசம் வேண்டும் என்ற பெருங்கனவைக் கொண்டு செயலாற்றினார். சாதி, மதச் சகதிகளுக்கிடையே சிக்குண்டிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பினார். காலச்சூழலில் அவ்வியக்கத்தை தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகிற தமிழ்த்தலைமுறைப்பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை எடுத்துச்செல்வார்கள்’ என்று அன்றே சொல்லிவிட்டுச் சென்றார். இன்றைக்கு அவர்வழி வந்த தமிழ்ப்பிள்ளைகள் அவர் ஏந்திச் சென்ற தேச விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய அவரது வழியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு அவர் நினைவைப் போற்றுகிற இந்நன்னாளில் சூளுரைத்து அயராது களமாட உறுதியேற்கிறோம். நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் பிள்ளைகள் செம்மார்ந்த புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response