மீண்டும் ஒரு பேய்ப்படம்.
வீடு,நிலம் வாங்கி விற்கும் தரகர் வாசு (ஜீவா) அவருடைய நண்பர் சூரணம் (சூரி).
விற்பனையே ஆகாது என்று சொல்லப்படுகிற வீட்டையும் விற்றுக்காட்டுகிற வாசுவுக்கு ஒரு முன்கதை உண்டு. அதன் காரணமாக அவர் ஒரு பெரியவீட்டை வாங்குகிறார்.
அந்த வீட்டுக்குக் குடிபோனால் அங்கு ஏற்கெனவே தம்பிராமையா குடும்பம் இருக்கிறது. இந்த வீடு எங்களுக்குத்தான் சொந்தம் என்று அவர்கள் சொல்ல சிக்கல் ஏற்படுகிறது.
அவர்களை வீட்டைவிட்டு விரட்ட, இந்த வீட்டில் பேய் இருக்கிறது என்றொரு கதையைச் சொல்கிறார்.
ஆனால் உண்மையிலேயே அந்த வீட்டில் ஒன்றல்ல இரண்டு பேய்கள் இருக்கிறன. அவை வாசு மற்றும் குடும்பத்துக்கு என்ன செய்தன? பேயிடமிருந்து வீட்டை மீட்டார்களா? என்பதுதான் கதை.
இந்தக்கதையை முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் புதுஇயக்குநர் ஐக். படத்தின் தொடக்கக் காட்சிகளும் நாயகன்,நாயகி அறிமுகக்காட்சிகளும் நன்று. ஜீவாவுக்கும், சூரிக்கும் வாழை இலை உடை கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி யாரைத் திட்டுவதற்காக வைத்தீர்கள் இயக்குநரே?
நாயகன் ஜீவா, நாயகி ஸ்ரீதிவ்யா, நகைச்சுவை சூரி, தம்பிராமையா, மயில்சாமி, கோவைசரளா, ராதிகா, ராதாரவி, தேவதர்ஷினி, இளவரசு உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். எல்லோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
சூரியின் நகைச்சுவைக்காட்சிகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம். அவற்றுக்கு வரவேற்பும் அதிகம்.
படத்தில் காதல், பாசம் ஆகியனவும் இருக்கின்றன. ஆனால் எதுவும் முழுமையாக இல்லை.
பாடல்கள் படத்தோடு இருக்கின்றன.
வழக்கமான பேய்ப்படங்கள் போலவே இருப்பதும், இந்தப்பட பேயின் பிரச்சினை என்ன என்று தெரியாமல் இருப்பதும் பலவீனம்.