திமுக கூட்டணிக்கு பாமகவை அழைத்தாலும் கவலையில்லை – திருமாவளவன் பேச்சு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெருந்தலைவர் அம்பேத்கர் சிலை அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது:–

அம்பேத்கர் இந்தியாவில் உருவான பவுத்த மதத்தைப் பின்பற்றி வந்தார். அதற்குக் காரணம் பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் பின்பற்றினார். அது சமத்துவத்தைப் போதித்த கோட்பாடு, இந்துத்துவத்தை எதிர்த்த கோட்பாடு அது. அதனைப் புரிந்து கொண்ட தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் ஒருவர்தான். இந்தியா முழுவதும் தலித் சமுதாயத்தையும், இயக்கங்களையும் குறி வைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. மதமாற்றத்தைத் தடுக்க தலித்துகளை இந்துத்வா அமைப்புகள் ஒடுக்கி வருகின்றன.

தற்போது பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை என்னவென்றால் அனைத்து மாநிலங்களையும் பா.ஜ.க ஆளவேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி காலூன்றி ஆட்சியில் ஆளவேண்டும் என்பதுதான் மிக முக்கியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க வை பலவீனப்படுத்தியது மட்டுமின்றி தி.மு.க வையும் அழிக்க நினைக்கிறது. இதனை தி.மு.க வின் மூத்த தலைவர்கள் உணர்ந்தால் மதவாத சக்தியும், சாதியவாத சக்திகளையும் அழிக்க முடியும். பா.ஜ.க.வின் அடுத்த குறியே தி.மு.க தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் தி.மு.க கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தை மற்றும் இடதுசாரிகள் கலந்து கொண்டது.

தி.மு.க.வில் கூட்டணிக்கு யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் இந்த தேசத்தை சாதியவாத மற்றும் மதவாத சக்திகளிடையே இருந்து காப்பற்ற எப்போதும் கலைஞரோடு துணை நிற்பேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் கையைப் பற்றியது அடுத்த தேர்தலுக்கான கூட்டணிக்காக அல்ல. மதவாத, சாதியவாத, பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான். ராமதாசைக் கூட கூட்டணிக்கு அழைத்து கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. போனமுறை இப்படித்தான் கடைசி நேரத்தில் எங்களைக் கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டார்கள். கூட்டணியில் அப்போது இடம் பெற்றிருந்தால் இப்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார். கூட்டணிக்காக நான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டத்தில் பங்கேற்றேன்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

Leave a Response