
சமஸ்கிருதத்தில் உருவாக இருக்கும் ‘தி லெஜென்ட் ஆப் புண்ணியகோடி’ என்கிற அனிமேஷன் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் இசைஞானி இளையராஜா. மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் இந்த புதுமையான படைப்புக்கான மூலக்கதை, மூலக்கதை மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாம்.. உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதைதான் இந்தப்படம்.
ரவி சங்கர் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை தயாரிக்கும் முயற்சிக்கு உதவுவதற்காக, துபாயில் வாழும் ஓவியர் திருமதி ஷெரின் ஆப்ரஹாம் என்பவர் ஒரு கலை கண்காட்சி செய்ய முடிவெடுத்துள்ளார். இந்த கண்காட்சி சென்னை ஆள்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஒரு படம் தயாரிக்க ஓவியர்கள் ஒருங்கிணைவது இது முதன்முறையாகும். இதில் இவர் செய்த இருபதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த ஓவியங்களின் விற்பனையால் வரும் தொகையை புண்ணியகோடியின் தயாரிப்புக்கு கொடுக்கப்போவதாக ஷெரின் அறிவித்துள்ளார்.


