
கர்நாடகாவின் காவிரித் திருட்டைத் தடுப்போம் என்ற முழக்கத்தோடு,காவிரி உரிமை மீட்புக் குழு முன்னெடுத்த கண்டனப் பேரணி,26.11.2026, வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்க,மழைத் தூறலுக்கு இடையிலும் பல்வேறு கிராமங்களிலிருந்து ஊர்திகளில் புறப்பட்டு, காவிரி ஆற்றுப் பாலம் வடகரையில்,புதுச்சத்திரம் பயணியர் மாளிகை அருகில் காலை முதலே உழவர்களும் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் திரளாகக் கூடினர்.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் பாவலர் நா.இராசாரகுநாதன் எழுதி,திருச்சி பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி பாடி இசையமைத்த “வீதிக்கு வா தமிழா வீதிக்கு வா! காவிரியைக் காத்திடவே வீதிக்கு வா!” என்ற இப்பேரணிக்கான போராட்டப் பாடலை ஒலிப்பெருக்கி ஊர்தி ஒலிபரப்பியது.
கையில் கோரிக்கைப் பதாகைகளுடன்,ஆண்களும், பெண்களுமாய் கூடிய கூட்டத்தினர்,”காவிரி இல்லாமல் வாழ்வில்லை! களம் காணாமல் காவிரி இல்லை!” என்ற முழக்கங்கள் விண்ணதிர பேரணியாக நடந்தனர்.பேரணி ஆற்றுப்பாலத்தைக் கடந்து,திருக்காட்டுப்பள்ளி கடைவீதிகளின் வழியே சென்றபோது வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள்,வணிகர்கள்,உழவர்கள் கூடிநின்று வரவேற்றனர்.பேரணி திருக்காட்டுப்பள்ளி – கூடநாணல் சாலை சந்திப்புவரை சென்று நிறைவடைந்தது.
கா.உ.மீ.குழுவின் பொருளாளர் த.மணிமொழியான்,தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி.வெங்கட்ராமன்,தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன்,இந்திய சனநாயகக் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் ச.சிமியோன் சேவியர்ராசு,காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர் அல்லூர் சாமி.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேரணியை வழிநடத்தினர்.
தமிழர் தேசியக் களத்தின் அமைப்பாளர் ஆரூர் ச.கலைச்செல்வன்,தமிழக உழவர் முன்னணி துணைத்தலைவர்
க.முருகன்,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சிதம்பரம் பொறுப்பாளர் சுரேசு,காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர் தி.செந்தில்வேலன்,வெள்ளம்பெரம்பூர் துரை.இரமேசு,ஓரத்தூர் ச.சிவப்பிரகாசம்,கடம்பங்குடி இரா.தனசேகரன்,திருத்துறைப்பூண்டி ப.பழனிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி,தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை,த.தே.பே.தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பழ.இராசேந்திரன்,மூ.த.கவித்துவன்,குடந்தை
க.விடுதலைச்சுடர்,திருச்சி வே.க.இலக்குவன்,சாமிமலை க.தீந்தமிழன்,பூதலூர் பி.தென்னவன்,மா.மணிமாறன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் பாவலர் நா.இராசாரகுநாதன்,மகளிர் ஆயம் துணைத்தலைவர் க.செம்மலர்,பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு.செந்தமிழ்ச்செல்வி,த.தே.பே.பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் க.காமராசு,தஞ்சை நகரச் செயலாளர் இலெ.இராமசாமி,சிதம்பரம் வேந்தன் சுரேசு உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.
உழவர் மற்றும் பொது அமைப்புகளின் சார்பில்,தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பூதராயநல்லூர்
ஆ.இராமலிங்கம்,கோவில்பத்து தெட்சிணாமூர்த்தி,பூதலூர் சுந்தரவடிவேல் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) ஆகியோரும்,வள்ளலார் பணியகத்தின் தலைவர் மு.சுந்தரராசன்,பொருளாளர் தியாகராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்டச் செயலாளர் ச.வாசுதேவன்,வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.செயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது எனப் பொய்யைப் பரப்பி வருவதாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரைப் பேரணியில் பங்கேற்றோர் கடுமையாகக் கண்டித்தனர்.உச்சநீதிமன்றம் தீர்ப்பின் தகவல்களை மறைத்துப் பரப்பப்படும் இத்தகைய கருத்துகள் குறித்துத் தன்னிச்சையாக (Suo Moto) நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பேரணியில்,காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறையாகச் செயல்படுத்தித் தமிழ்நாட்டுக்குரிய நீரை வாராந்திர,விகிதாச்சார அடிப்படையில் பெற்றுத் தரவேண்டும் என்றும்,இந்திய அரசு நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.தமிழ்நாடு அரசு காவிரி நீர் பிரச்சனையில் மவுனம் கலைத்து,மக்களைத் திரட்டி,சம்பா/தாளடி பயிர்களைக் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காவிரி உரிமையை மீட்கத் தமிழ்நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும்,தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்துக் கூட்டுறவுப் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், இந்த ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுச் சந்தா தொகையை அரசே ஏற்கவேண்டும்,தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்துப் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35,000 இழப்பீடு வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
காவிரியில்லாமல் வாழ்வில்லை!களம் காணாமல் காவிரி இல்லை! என்ற முழக்கத்துடன் பேரணி நிறைவுற்றது.
பேரணிக்குத் தலைமை தாங்கிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பேசியபோது….
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார்,இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியை மேடையில் வைத்துக்கொண்டே காவிரியைத் தடுக்க மேக்கேத்தாட்டு அணை கட்டுவோம் என்று பேசுகிறார்.இரண்டு மாநிலங்கள் தொடர்பான சிக்கலில் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று நடுநிலையோடு சொல்ல மோடியும் தயாராக இல்லை.எனவே,டி.கே.சிவகுமார் அணை கட்டுவோம் என்று சொல்வதை ஆதரிப்பதைப் போல மோடியும் வேடிக்கை பார்க்கிறார் என்பதை மட்டும் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.ஆக,இந்திய அரசும் கர்நாடக அரசும் காவிரி உரிமையை மறுத்து தமிழ்நாட்டை வஞ்சித்து நிற்கின்றன.காவிரி உரிமையைப் பெற்றுத் தராத,உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட செயல்படுத்தாத இந்திய அரசின் அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால், உழவர்கள் எழுச்சியோடு சென்று கறுப்புக்கொடி காட்டவேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.


