ஒரு வாரத்தில் 40 கொலைகள் என ஒப்புக்கொண்ட அமைச்சர் – சிக்கிய விஜய்

தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது மற்றும் ஒரே வாரத்தில் நடந்த தொடர் கொலைகளைச் சுட்டிக்காட்டி திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில்,மாநிலத்தில் கொலைச் சம்பவங்கள் வழக்கத்தை விட அதிகரிக்கவில்லை என்றும் பண்டிகைக் காலங்களில் ஏற்படும் திடீர் தகராறுகளால் நடக்கும் சம்பவங்களை ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு தோல்வியாகக் கருத முடியாது என தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சர்ச்சை பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில்,இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார்,தீபாவளி வாரத்தில் 40 கொலைகள் நடந்துள்ளது என ஒப்புக்கொண்டுள்ளார்.ஒரேநாளில் 13 கொலைகள் என்பதை மறுத்த அவர்,தீபாவளி நாளில் எட்டு கொலைகள் மட்டுமே நடந்தது என்றும் ஒரு வாரத்தில் நாற்பது கொலைகள் நடந்துள்ளன என்று சொன்னதன் மூலம் அதை உறுதிப்படுத்திய அமைச்சர் நிர்மல் குமார், அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் துரிதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவால் இவை நடக்கவில்லை என்றும், தனிப்பட்ட முன்விரோதம், போதைப்பொருள் மற்றும் குடும்பத் தகராறுகளாலேயே இக்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தவெக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இதுபோல் குற்றங்கள் நடந்தபோது அது திமுக ஆட்சியின் தோல்வி என மேடைக்கு மேடை விமர்சித்து வந்த விஜய் ஆட்சியிலும் இப்படியே நடக்கிறது என்பதும் அவற்றை அவரால் தடுக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிற விமர்சனத்தில் விஜய் சிக்கிக்கொண்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

– இராசன்

Leave a Response