
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அண்மையில் தனது சிகை அலங்காரத்தை மாற்றினார்.‘பாப் கட்டிங்’ முறையில் வெட்டி,ஸ்டைலாக சென்னை மாமன்றக் கூட்டத்துக்கு அவர் வந்தபோது எடுக்கப்பட்ட காணொலி இணையத்தில் பரவியது.அவரது இந்த மாற்றம் கவனம்பெற்ற நிலையில்,விஜய் கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.அவர் குறித்து ஆபாச பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து மேயர் பிரியா வெளியிட்ட பதிவில்….
நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகி விடுகிறது.அன்று முதல் இன்று வரை,மிகச் சாதாரண விசயங்கள்கூட பிரச்சினை ஆக்கப்படுகின்றன.நான் பர்கர் சாப்பிட்டாலோ,முடி வெட்டிக்கொண்டாலோகூட பிரச்சினை ஆகிறது.
நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட விசயங்களும் கேள்வி கேட்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது.இந்த விமர்சனம், நான் ஒரு பெண் என்பதற்காகவா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதற்காகவா? என் விசயம் என்று வரும்போது,பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாக உரிமை கோருபவர்களும் எங்கே மாயமாய் மறைந்து போகிறார்கள் என்று தெரியவில்லை.பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களின் தோற்றம், வாழ்க்கைமுறை அல்லது தனிப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றித் தவறாக மதிப்பிட யாருக்கும் உரிமை கிடையாது.ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுக்கென்று சுயமரியாதையும்,கண்ணியமும்,தனது சொந்த விருப்பப்படி வாழ்வதற்கான உரிமையும் உண்டு.மேயர் என்ற பதவியைத் தாண்டி,அந்தப் பெண்ணை மதிக்க நினைவில் வையுங்கள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேயர் பிரியா மீதான விமர்சனத்திற்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது…
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தொடர்ந்து கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படக்கூடாது.ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் ஒரு பெண் நுழைவதே சவாலானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியலில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வது அதைவிடக் கடினமானது.இந்தத் தடைகளைத் தாண்டி முன்னேறும் பெண்களை குறிவைத்து தனிப்பட்ட முறையில் தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.மேயர் பிரியா ராஜனுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.எந்தப் பெண்ணையும் தவறாகப் பேசவிடமாட்டேன் என்று முதல்வர் விஜய் கூறுகிறார்.அப்படியிருக்க,மேயர் பிரியா ராஜன் மீது அவரது இரசிகர்களும்,அவரது கட்சியினரும் நடத்தும் இந்தத் தாக்குதல்களை எதற்காக அவர் அனுமதிக்கிறார்?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


