
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்குத்
தள்ளப்பட்டது.அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு
சி.வி.சண்முகம் தலைமையில் 25 சமஉக்கள் தனி அணியாகச் செயல்பட்டனர்.மேலும்,தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
ஆனால்,அவர்கள் எதிர்பார்த்த மாதிரி அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.இதனால் சி.வி.சண்முகம் அணி கலகலத்துப்போனது.
அதோடு, சி.வி.சண்முகம் அணியிலிருந்த எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் நேற்று சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை
நடத்தினர்.இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில்,இரு அணியினரும் தலைமைச் செயலகம் புறப்பட்டுச்
சென்றனர்.அங்கு இரு அணிகள் சார்பிலும்,தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
மேலும்,அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி,கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர்.
இந்த நிகழ்வில்,சி.வி.சண்முகம் உடன் வரவில்லை.அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.அவருடன் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட சமரசமும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், பேரவைத் தலைவரைச் சந்தித்தபின்,செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது….
அதிமுக தோல்வி அடைந்த பிறகு,சில கருத்துகளை நாங்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் சொன்னோம்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலை எடுத்தோம்.அதனால் 25 பேரை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி
தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.நாங்களும் 22 பேரை தகுதிநீக்கம் செய்ய மனு
கொடுத்திருந்தோம்.
இந்த இரு மனுக்களையும் நாங்கள் திரும்பப் பெற்றுவிட்டோம்.கட்சியில் பிளவு ஏற்படவில்லை.எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான் நிலவியது.இப்போதும்,எப்போதும் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். சி.வி.சண்முகமும் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். அவரும் எங்களுடன் உள்ளார்.
கட்சியின் தொடர் தோல்வி குறித்து,பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும்,உயர்மட்டக்குழு அமைத்து ஆராயவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.அதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக.நாங்கள் பதவி கேட்டு தவெகவிடம்
செல்லவில்லை.இனி ஒற்றுமையாக இருந்து அதிமுக வெற்றிக்காகப் பாடுபடுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் சி.வி.சண்முகம் எங்களுடன்தான் இருக்கிறார் என்று எஸ்.பி.வேலுமணி சொன்னாலும் அவர் எடப்பாடியைச் சந்திக்கச் செல்லவில்லை.
ஏனென்பதற்கு புதிய காரணம் சொல்லப்படுகிறது.அது என்னவெனில்?
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம்,வளவனூர் பேரூர் அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் பேட்டைமுருகன் தலைமையில் நேற்று நடந்தது.இதில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற
எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த புதிய மாவட்டச் செயலாளரான பசுபதி உரையாற்றினார்.
அவர் பேசுகையில்….
அதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட துரோகிகள் எல்லாம் கட்சியின் தோற்றத்தை மாற்றிக்காட்ட நினைக்கிறார்கள். புதுசா கட்சிக்கு நான் வரவில்லை.1996 இல் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு நான் பாமக மாவட்டச் செயலாளர். அப்போது சி.வி.சண்முகம்,எந்த பங்க் கடையில் கவுந்து படுத்திருந்தார் என்று தெரியாது.
அப்போதெல்லாம் அவர் ஒரு ஆளேயில்லை.அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 20 ஆண்டு கால மன்னர் ஆட்சி நடந்திருந்தது.அவர்கள் நினைத்தது,வச்சதுதான் சட்டம்.அவர்கள் மட்டும்தான் கருத்தைச் சொல்லமுடியும், பேசமுடியும் என்பது எடப்பாடி பழனிச்சாமியால் மாற்றப்பட்டிருக்கிறது.நாம் ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதைப்போல் மாயை ஏற்படுத்துகின்றனர் என்றார்.
அதைத் தொடர்ந்து வானூர் தொகுதி முன்னாள் சமஉ சக்கரபாணி பேசும்போது….
சி.வி.சண்முகம் கட்சிக்கு பெரிய துரோகத்தை செய்து நடுத்தெருவில் நிற்கிறார்.தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா,அவரது பதவி பறிக்கப்படுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.மீண்டும் கட்சியில் அவர் சேரமுடியாது.சி.வி.சண்முகத்தைத் தவிர மற்ற எல்லோரையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.அவரை கட்சியில் மீண்டும் சேர்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக கிளைச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்து விடுவோம் என்று தலைமையிடம் கூறிவிட்டேன்.எனவே இனி நாம்தான் கட்சி.கட்சியை வலுப்படுத்த நாம் பணியாற்றவேண்டும். பணம் இருப்பவன்,இல்லாதவன் என்று இல்லாமல் உழைச்சவர்களுக்கு பதவி கிடைக்கும் என்றார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகத்தான் சி.வி.சண்முகம் எடப்பாடி சந்திப்பு நேற்று நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரை சமாதானப்படுத்திவிட்டு சி.வி.சண்முகட்தி எடப்பாடி சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது.
இன்னொருபக்கம் அவரை தவெக பக்கம் இழுக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
இரண்டில் எது நடக்கும்? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்று சொல்கின்றனர்.


