
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.
திமுக கூட்டணியில் இருந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசு தானாக வந்து ஆதரவு தெரிவித்தது.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் 2 சமஉக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சமஉக்கள் 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 சமஉக்கள், ஐயூஎம்எல் 2 சமஉக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10 ஆம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தநிலையில் அதிமுகவில் தொடர் தோல்விகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது.பொதுக்குழுவைக் கூட்டிதோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்.பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகவேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் தரப்பு வலியுறுத்தியது.இதனால் அதிமுக உடையும் நிலை உருவானது.
அதே நேரத்தில் ஆதரவு அளித்த கட்சிகளில் யாராவது வெளியில் போனால் தவெக ஆட்சிக்குப் பாதிப்பு ஏற்படும். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தரப்பின் ஆதரவைப் பெற தவெக முடிவு செய்தது.அவர்கள் ஆதரவு அளித்தால் 5 வருடம் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆட்சியை நடத்திவிடலாம் என்று விஜய் திட்டமிட்டார்.
இந்நிலையில் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் தரப்பிடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அவர்களுடன் விஜய்,ஆதவ் அர்ஜூனா,விஷ்ணு ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 7 அமைச்சர்கள் வரை தர விஜய் முடிவு செய்தார்.
இதையடுத்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சமஉக்களுக்கு 15 சி வரை கொடுப்பதாக
ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியானது.இதில் பலருக்கு பணமும் செட்டில் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை நம்பி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு அதிமுக எஸ்.பி.வேலுமணியின் 25 சமஉக்கள் ஆதரவு அளித்தனர்.அதோடு,அதிமுகவில் தாங்கள்தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 22 சமஉக்களை தகுதிநீக்கம் செய்யவேண்டுமென சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது.
அதேநேரத்தில் எடப்பாடி தரப்பும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவிற்கு வாக்களித்த 25 அதிமுக சமஉக்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்றும் மனு அளித்தது.மேலும் ஆளுநரைச் சந்தித்து 25 சமஉக்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இவ்வாறு இரண்டு அணியினரும் மாறி,மாறி சபாநாயகரிடம் முறையிட்டனர்.இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று இதுவரை தெரியவில்லை.
இந்தநிலையில் தவெகவின் அமைச்சரவை கடந்த 21 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது.அதில் அதிமுக எஸ்.பி.வேலுமணியின் அணிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.ஒருநாள் முன்னதாக தங்களுக்கு அமைச்சருக்கான பட்டியலில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்ற விவரம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால்,எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தரப்பு முதல்வர் விஜய்க்கு தொலைபேசி செய்தது.ஆனால்,அவர் அழைப்பை ஏற்கவில்லை.2 நாட்களாக எஸ்.பி.வேலுமணி தரப்பு அழைப்பை விஜய் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த தவெக நிர்வாகிகளுக்கு அழைத்தும் எந்தப்பலனும் இல்லை. அவர்களும் அழைப்பை ஏற்கவில்லை.
அதே நேரத்தில் ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை விஜய் வழங்கினார். இனிமேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பின் ஆதரவு தேவை இல்லை என்ற முடிவுக்கு விஜய் வந்தார்.
அப்போதுதான் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி அணிக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக விஜய்யை நம்பி இப்படி ஏமாற்றப்பட்டதை அறிந்து கவலையடைந்தனர்.
இந்நிலையில்தான் எடப்பாடி குறித்து ஆவேசமாகப் பேசி வந்த எஸ்.பி.வேலுமணி அணி திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டி அளித்தது.அதில் எஸ்.பி.வேலுமணி,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிதான்.எடப்பாடியுடன் எந்த மோதலும் இல்லை.எங்களுக்குள் இருப்பது கருத்து வேறுபாடுதான் என்று திடீரென பல்டி அடித்தார்.
எடப்பாடிக்கு எதிராக சபாநாயகரிடம் போர்க்கொடி தூக்கியவர்.எங்களைத்தான் அதிமுகவாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எஸ்.பி.வேலுமணி எடப்பாடியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று திடீரென அறிவித்தார்.
இதை எடப்பாடியும் ஏற்றுக்கொண்டார்.பிரிந்து சென்றவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம்.பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தக்கூடாது.பொதுச்செயலாளருக்கு எதிராகக் கலகம் செய்வதைக் கைவிட வேண்டும்.பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே மாவட்டச் செயலாளர்கள் பதவி வழங்கப்படும்.ஒரு சிலருக்கு மட்டும் மீண்டும் பதவி வழங்கப்படாது என்று எடப்பாடி கூறினார். மேலும் தேவை ஏற்படும்போது மட்டுமே பொதுக்குழு கூட்டப்படும்.தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும்.கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதை எஸ்.பி.வேலுமணி தரப்பும் ஏற்றுக்கொண்டது.இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே சென்னையில் இன்று சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக எடப்பாடியும் வேலுமணியும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


