மு.க.ஸ்டாலினுக்குப் புகழாரம் – விமர்சகர்கள் முகத்தில் கரிபூசிய இராகுல்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பாண்டியநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி கலந்து கொண்டார்.அவர்,திமுக வேட்பாளர்கள் அமைச்சர் ஆர்.காந்தி,ஈஸ்வரப்பன்,காங்கிரசு வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம்,விசிக வேட்பாளர் எழில் கரோலின் ஆகியோரை ஆதரித்துப் பேசியதாவது….

இந்தத் தேர்தல் மூலமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டுக்குள் நுழைய முயல்கிறது. அதனை நாம் அனுமதிக்கக்கூடாது. நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் தொகுதி மறுவரையறைச் சட்டத்தை கொண்டுவர முயன்றனர்.அதனை நாம் முறியடித்துள்ளோம்.

மக்களவையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க நினைக்கிறாா்கள். தமிழ்நாட்டையும், வடகிழக்கு மாநிலங்களையும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மோடி சிதைக்க முயற்சிக்கிறார்.

எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியது இந்தியா. அனைத்து மாநிலங்களுக்கும் குரல் கொடுக்கும் உரிமை உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகள், ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், பண்பாடு
ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் அடையாளம் மற்றும் சித்தாந்தத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது. மோடி, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்கிறார். ஆனால், இந்தியா பல்வேறு மொழிகளால் பிணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சாதாரண மொழி அல்ல.தமிழ்தான் இந்திய நாட்டுக்குத் தாய்.தமிழ்நாடு, தமிழ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டிக்கிறோம். ஊழலில் மலிந்துள்ள அதிமுகவை பாஜக முழுவதுமாகக் கைப்பற்றி வருகிறது. அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜக பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டை பாஜக ஆளமுடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்.யாரும் முகமூடி போட்டுக்கொண்டு ஆளமுடியாது. நாங்கள் டில்லியை ஆளும்போது தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை.

நாங்கள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். நாங்கள் மோடி அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்துள்ளோம். மோடி அரசுக்கு இது ஒரு ஜனநாயகத் தோல்வி. அரசியல் அமைப்புச் சட்டத்தை சீரழிக்கும் முயற்சியை தடுத்துள்ளோம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது பாஜக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு – காஷ்மீர் முதல் அசாம் வரை தவறிழைக்க முயற்சித்த
பாஜகவைத் தடுத்துள்ளோம். நாட்டின் மொழி, சித்தாந்தத்தை சிதைக்க நினைக்கிறது பாஜக. அதனை நம் கூட்டணியால் தடுத்து நிறுத்துவோம். நம் எல்லையைக் கூட பாஜகவால் நெருங்க முடியாது.

தமிழ்நாடு வளமான நாடாக வளர்ந்துள்ளது. சமூகநீதிக்கான நாடு தமிழ்நாடு. பாஜக தமிழ்நாட்டைக் குறைத்து மதிப்பிடுகிறது. இதற்கு, தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, கல்வி நிதி மற்றும் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை தாமதப்படுத்தி வருகிறார்கள். நான் டில்லியில் உங்களுக்கான சேவகனாகவும் குரலாகவும் இருக்கிறேன். மோடி என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது. திமுக – காங்கிரசு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மோடி அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுகிறார். ஏனென்றால், நரேந்திர மோடியின் நிதி அமைப்பை ட்ரம்ப் அறிவார். அதானிக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பை அவர் புரிந்துகொள்கிறார்.

அதேபோல நரேந்திர மோடி தமிழ்நாட்டின் முதலமைச்சரையும் கட்டுப்படுத்த நினைக்கிறார்.அதற்காகத் தான் அவர் அதிமுகவை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்குத் தெரியும். மு.க.ஸ்டாலின் சுதந்திரமானவர், மோடியால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக காங்கிரசு கூட்டணி அமைந்ததிலிருந்தே இராகுல்காந்தி அதை விரும்பவில்லை,அதனால் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரை செய்ய வரவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன.நேற்றைய பரப்புரை மூலம் அதை முறியடித்ததுடன் மோடியால் மு.க.ஸடாலினைக் கட்டுப்படுத்தவே முடியாது அவர் சுதந்திரமானவர் என்று புகழாரம் சூட்டியதன் மூலம் இதுவரை விமர்சனம் செய்த அவ்வளவு பேர் முகத்திலும் இராகுல்காந்தி கரிபூசிவிட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response