அமமுக வேட்பாளர்களை அவமதிக்கும் எடப்பாடி – டிடிவி.தினகரன் கோபம்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று மாலை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு பேருந்துநிறுத்தம் பகுதியில் அவர் வாகனப் பரப்புரை செய்தார். அப்போது அவர் ஜோலார்பேட்டை அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை மட்டும் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.

திருப்பத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஞானசேகரனை தனது வாகனத்தில் ஏற்றவில்லை. இதனால் தனித்துவிடப்பட்ட அவர், அங்கு கொண்டுவரப்பட்டு நிறுத்திய மற்றொரு வாகனத்தில் ஆதரவாளர்களுடன் ஏறிக்கொண்டார். அங்கிருந்தபடி அவரது ஆதரவாளர்கள் குக்கர் சின்னத்தைக் காண்பித்தனர். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி சம்பிரதாயத்திற்காக ஒரே ஒருமுறை மட்டுமே அமமுக வேட்பாளர் பெயரைக் கூறி அவருக்கு ஆதரவளிக்கும்படி பேசி பரப்புரையை முடித்துக்கொண்டார்.

இதேபோல, சிவகங்கையில் ஏபரல் 1 ஆம் தேதி பரப்புரையின்போது, சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை மட்டும் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டார். காரைக்குடி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை வாகனத்தில் ஏற்றவில்லை. பிற பிரதான கட்சிகள் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களையும் தங்கள் வாகனத்தில் ஏற்றி வாக்கு சேகரிக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி,அமமுக வேட்பாளர்களைத் தொடர்ந்து தவிர்ப்பது அமமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மயிலாப்பூரில் தனது பரப்புரையை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிய போது, அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை தனது வாகனத்தில் ஏற்றி பரப்புரை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,அமமுக வேட்பாளர்களை அவர் அவமதிப்பது போல் நடந்துகொள்வது டிடிவி.தினகரனை கோபப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response