அடுத்தடுத்து சசிகலா கட்சியில் இணையும் அதிமுகவினர் – எடப்பாடி அதிர்ச்சி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதுடன், மீண்டும் கட்சியில் சேர்க்கமாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அடம்பிடித்த காரணத்தினால் தனிமைப்படுத்தப்பட்டார் சசிகலா.கட்சியை ஒருங்கிணைக்க அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது.இதனால், 8 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்திருந்த சசிகலா, இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

இந்தக் கட்சி சார்பாக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளார்.

ஏற்கெனவே,59 வேட்பாளர்களை அறிவித்த சசிகலா, நேற்று 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

அதன் விவரம்…

1.உசிலம்பட்டி – பி.அய்யப்பன் சமஉ, 2. அரவக்குறிச்சி – திருமதி எம்.ஆசியா பேகம், 3.ஆம்பூர் – ச.ஆரூன் ரஷீத் படு, 4. அம்பாசமுத்திரம் -வி.சங்கர சுப்பிரமணியன் வேல்சாமி,5. ஆண்டிபட்டி -எஸ்.செல்லபாண்டியன்

இவர்களில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஐயப்பன். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், கடந்த மாதம் அவருடன் திமுகவில் இணைந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில், உசிலம்பட்டி தொகுதி காங்கிரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய ஐயப்பன், நேற்று திடீரென சசிகலாவைச் சந்தித்தார்.பின்னர் உடனடியாக தன்னை சசிகலாவின் கட்சியான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டார். இதன் எதிரொலியாக சசிகலா வெளியிட்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் உசிலம்பட்டி தொகுதியின் வேட்பாளராக ஐயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் க.பாலமுருகன்.மருத்துவரான இவர் அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்.இவர் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அதிமுக தலைமைக் கழகத்தில் 2011, 2016 என இருமுறை விருப்பமனு கொடுத்திருந்தார். ஆனால் அதிமுகவில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக 2021 ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்தத்தேர்தலில் அவர் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் நேற்று முன்தினம் சசிகலாவைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதன்பலனாக சோழவந்தான் தொகுதியின் அஇபுதமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல்,அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பலர் சசிகலாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி கடும்அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response