
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக, டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே ஆஜரான தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூர் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடந்தது.
இதற்கிடையே, விஜய் பரப்புரைப் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கண்காணிப்பு கருவிகள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சனவரி 6 ஆம் தேதி சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. அதன்பேரில் சனவரி12 ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2 ஆவது முறையாக அழைப்பாணை அனுப்பி சனவரி 19 ஆம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போதே, குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படலாம் என்றும், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அதேநேரம், 2 ஆவது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய் இன்று (மார்ச் 10) மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ அலுவலக வட்டாரங்களில்,கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் மேலும் சில விவரங்கள் கிடைத்துள்ளன.அதுதொடர்பாக விஜய்யிடம் விசாரித்து,தெளிவுபெற வேண்டியுள்ளது. அதற்காக அவர் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே,சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைச் சுட்டிக்காட்டி நேரில் ஆஜராக தனக்கு 15 நாள் விலக்கு அளிக்கவேண்டும், சென்னையிலேயே ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் சிபிஐக்கு விஜய் கடிதம் எழுதி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியதாக தகவல் வெளியானது.அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு இதுதொடர்பான தகவலை சிபிஐ அனுப்பியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது….
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..
வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


