
சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.அப்போது அவர் கூறியதாவது….
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெல்லாது. தேர்தலில் பழனிச்சாமிக்கு 3 ஆவது இடம்தான் கிடைக்கும். பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக்கினால் வெற்றிபெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம் அளித்தேன். தலைமைப் பொறுப்புக்குச் சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிச்சாமி.
தன்னை விமர்சித்தவர்களைக் கூட கட்சியில் சேர்த்து அரவணைத்தார் ஜெயலலிதா. ஆர்.எம்.வீரப்பன், பா.வளர்மதி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியவர்கள்தான். பழனிச்சாமியின் மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகின்றனர் எடப்பாடி என்ற துரோக சக்தி 2026 தேர்தலில் வீழ்த்தப்படும்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எஸ்.ஐ.ஆர் பணிகளை தமிழ்நாட்டில் தொடரலாம். எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விகளில் எனக்கே குழப்பம் வருகிறது.சாமானிய மக்களுக்கு எஸ்ஐஆர் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பற்றிய இரகசிய ஆவணங்கள் போயஸ் கார்டனில்தான் இருந்தன. போயஸ் கார்டனில் இருந்து கோப்புகளை ஒருபோதும் நான் அரசியலுக்காகப் பயன்படுத்த நினைத்ததில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமைச்சர்கள் குறித்த கோப்புகளை நாங்கள் கிழித்து எறிந்துவிட்டோம். போயஸ் கார்டனில் ஆதாரங்கள் அடங்கிய ஃபைலை நானும் மருத்துவர் வெங்கடேஷும் கிழித்து எறிந்துவிட்டோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் வண்டவாளங்கள் அந்த ஃபைலில் இருந்தன. என்னைக் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, ஆதாரங்களை நான் வெளியிட்டுவிடுவேனோ என பழனிச்சாமி பயந்தார். ஆவணங்களை ஒருபோதும் நான் வெளியிட நினைத்ததில்லை; ஆனால் எடப்பாடியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். தங்களைப் பற்றிய இரகசிய ஆவணங்கள் கோடநாடு பங்களாவில் இருப்பதாக நினைத்து ஆள் வைத்துத் தேடியுள்ளார் பழனிச்சாமி. ஆவணங்களைத் தேடி கோடநாடு பங்களாவுக்கு சென்றதன் காரணமாகவே அடுத்தடுத்து கொலைகள் நடந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கூட்டணிக்கு விஜய் கட்சி அழைத்ததா? என்ற கேள்விக்கு அதெல்லாம் சொல்ல முடியாது என்று கூறினார்.
இதன் மூலம்,விஜய் கட்சி சார்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது புலனாகிறது என்று சொல்லப்படுகிறது. தனியாகத் தேர்தலைச் சந்தித்தால் படுதோல்வி என்பதால் பல கட்சிகளிடமும் கூட்டணி சேர விஜய் கட்சி கெஞ்சிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் உலவிக் கொண்டிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இவருடைய பேட்டி அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


