கரூர் துயரம் விசாரணை நடந்தால் விஜய் மாட்டிக்கொள்வார் – சட்டவல்லுநர்கள் கருத்து

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வு கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்ல, நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சொன்னதுபோல தனிவிமானம் மூலம் நள்ளிரவில் கரூர் சென்றார் முதலமைச்சர்.அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதில் ’39 பேரும் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டனர். பிரேத பரிசோதனை செய்ய 11 பேர் கொண்ட மருத்துவக் குழு உள்ளது. காலை 7 மணிக்குள் பிரேத பரிசோதனை முடிந்து அனைத்து உடல்களும் ஒப்படைக்கப்படும்” என மருத்துவர் தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் வழங்கிடவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது….

மிகுந்த துயரத்தோடும், கனத்த இதயத்தோடும் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு சோக சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை விவரிக்கக்கூட மனம் வரவில்லை. வந்த செய்திகள் எல்லாம் என் மனதைக் கலங்கடித்தது.தகவல் அறிந்த உடனே அது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தேன்.

உயிரிழப்பு செய்திகள் வரத் தொடங்கியதும் அமைச்சர்களை உடனே கரூர் செல்ல உத்தரவிட்டேன். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அனுப்பி வைத்தேன்.கரூரை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவர்களை கரூர் செல்ல உத்தரவிட்டேன். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது. இனி நடக்கக்கூடாது.

துயரமான காட்சிகளைப் பார்த்தபோது என் மனதைக் கலங்கடித்தன. அதனால் இரவோடு இரவாக கரூர் வந்தேன். அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

இந்தநிகழ்வு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் விசாரணையின் போது,பரப்புரைக் கூட்ட அனுமதி கொடுக்கும்போதே காவல்துறை அறிவுறுத்தல்,உயர்நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் விஜய் கட்சியினர் கடைபிடிக்கவில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும்,இந்தத் துயருக்கு நடிகர் விஜய்யே முழுப்பொறுப்பை ஏற்றாக வேண்டும் என்றும் சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Response