கூட்டம் சேர தாமதம் செய்ததே இந்தக் கொடுந்துயருக்குக் காரணம் – மக்கள் வேதனை

தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக அவசர ஊர்திகள் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பரப்புரை செய்வதாக இருந்தது. 12 மணிக்கு கரூரில் பரப்புரை முடிக்க வேண்டும். ஆனால் கரூருக்கு அவர் மாலை 6 மணிக்கு மேல்தான் வந்தார். இதனால், காவல்துறை கொடுத்த நேரமான 12 மணிக்கு போனால் கூட்டம் வராது. கரூரில் தொழிலாளர்களுக்கு இன்று சம்பளநாள். டெக்ஸ்டைல்சுக்கு வேலைக்குப் போனவங்க 5 மணிக்கு மேலதான் வருவாங்க. இதனால், 6 மணிக்கு மேல போனா சரியாயிருக்கும்னு திட்டம் போட்டுத்தான் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் சம்பவம் நடந்த இடத்தில் பகல் 3 மணிக்கு ஒரு ட்ரோன் ஷாட் வெளியாகியுள்ளது. அதில் கூட்டம் குறைவாகவே இருந்தது தெரியவந்தது. இதனால் திட்டமிட்டே தாமதப்படுத்தியதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து கரூர் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

தவெக தலைவர் விஜய் கரூருக்கு வந்து 50 பேரை பிணமாக்கி விட்டுச் சென்றுவிட்டார். இரவே வெளிநாட்டிற்கு கிளம்பிப் போய்விடுவார், விஜய் நீதிமன்றத்திற்கு வந்து பதில் சொல்லியாக வேண்டும். உயிரிழப்புக்குக் காரணம் விஜய் தான், 2 மணிக்கு வருவதாகல் கூறினார்கள், ஆனால் இரவு 7 மணிக்கு வருகிறார்.

மதியத்தில் இருந்து சாப்பிடாமல் கூட இருந்தார்கள், ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று கூறினார்கள், விளம்பர அரசியல் செய்வதற்காக கும்பலை சேர்த்து பயங்கரமாக பண்ணியிருக்கிறார்கள், மக்கள் ஓட்டு அரசியலுக்காக வரவில்லை, நடிகர் வருகிறார் என்று பார்ப்பதற்காகத் தான் வந்தார்கள், இவ்வளவு உயிர் போனதற்கு இவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். முதலமைச்சர் நேற்று இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார், இவ்வளவு பிரச்சனைக்கு காரணமானவர் மூஞ்சியை திருப்பிவிட்டுச் செல்கிறார். திருச்சியில் தங்கியிருந்து இன்று காலை வந்து மக்களைச் சந்தித்து இருக்கலாம். 6 பிஞ்சு குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள், இரங்கல் தெரிவிக்காமல் கூடச் சென்றுள்ளார் இது கண்டனத்துக்குரியது. விஜய் ஆபத்தான அரசியல் செய்கிறார்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

இந்தக் கொடுந்துயர் நடந்ததும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள்,எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, சீமான் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டனர். நான்கு மணி நேரத்துக்குப் பிறகு விஜய் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்….

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

39 பேர் பலியான செய்து அறிந்தும், திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்தில் பதிலளிக்காமல் சென்ற விஜய், 4 மணி நேரத்துக்கு பின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.இதுவும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

Leave a Response