விஜய் வருகையால் எனக்குப் பாதிப்பு என பலர் சொல்வது ஏன்? – சீமான் விளக்கம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது….

பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு அவரவர் விரும்பிய சின்னங்கள் கிடைத்த போது 6 தேர்தலைச் சந்தித்த என் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்து, அதை கர்நாடகாவில் ஒரு கட்சிக்குக் கொடுத்தது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை,அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவையாவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் 5 விரல்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கும், இராகுல் காந்திக்கும் போட்டி. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு கூட்டணி. திமுக தலைமையில் ஒரு கூட்டணி. மோடியை முன்னிறுத்தி அண்ணாமலை தலைமையில் ஒரு கூட்டணி. நான் ஒற்றையாக நின்று 8.22 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறேன். எனில் நான் வளர்ந்திருக்கின்றேன் இல்லையா? இந்திய அளவில் நான் ஆட்டத்திலேயே இல்லை. ஆனால், என்னையும் தேடி வாக்கு செலுத்தி, என்னை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றியுள்ளனர்.

தேர்தலில் 1.1 வாக்கு விழுக்காட்டில் இருந்து 8.22 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருப்பது என் வளர்ச்சியாகும். இதுபோன்று வளர்ந்து வந்த கட்சி தமிழ்நாட்டில் கிடையாது.

தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால் எனது வாக்குகள் குறைந்துவிடும் என்கின்றனர். ஏன் தெரியுமா? அப்படியாவது கட்சியைக் கலைத்துவிட்டு, ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்துவிடுவார்கள் என்றுதான். செத்தாலும் நான் தனியாகத்தான் செல்வேன். தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்கவேண்டும். என் தனித்துவத்தை இழக்கமாட்டேன். நான் மக்களுக்கானவன். என் வெற்றியையும், தோல்வியையும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response