
ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி, 2023 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது…..
46 ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் சனவரி 6 ஆம் தேதிமுதல் 22 ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. சனவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.புத்தகக் காட்சியின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்குகிறார்.
பபாசி வழங்கும் சிறப்பு விருதுகள்,தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கவுள்ளார். விருது பெறுபவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக அரசின் ஆதரவுடன் சனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த புத்தகக் காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
புத்தகக் காட்சிக்கு 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக் காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர சிறியஅளவில் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களுக்காக சிறிய அரங்குகளும், திருநங்கை பதிப்பாளர்களுக்கு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சி தினமும் பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரைநடைபெறவுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் வரை புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வருபவர்களுக்கு வசதியாக சனவரி 22 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்கவுள்ளார்
இவ்வாறு அவர்கள் கூறினர்.


