
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
ஒட்டுமொத்தமாக 25 விழுக்காடு இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 விழுக்காடு இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்தான் தனித்துப் போட்டியிடுகிறோம் என்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


