
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது.
உயர்நிலைக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் ஆகியனவற்றில் சுமுகமுடிவு எட்டப்படவில்லை.அதன் பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7 (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தத்தமது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். குறிப்பாக நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்டப் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அக்கட்சியின் தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். காலை 9.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் வந்தார். சற்று நேரத்தில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் அடுத்தடுத்து தலைமை அலுவலகம் வரிசையாக வரத்தொடங்கினர்.
இதன்பின்னர் இருவரும் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.
அதேபோல், வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
திண்டுக்கல் சீனிவாசன்
தங்கமணி
எஸ்.பி வேலுமணி
ஜெயக்குமார்
சிவிசண்முகம்
காமராஜ்
ஜேசிடி பிரபாகர் – முன்னாள் எம்.எல்.ஏ
மனோஜ் பாண்டியன்
பா மோகன் – முன்னாள் அமைச்சர்
ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
கி மாணிக்கம் – சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ
வழிகாட்டுதல் குழு அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் வேறுவழியில்லாமல் அவர் ஒப்புக்கொண்டார் என்பதால் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் வென்றார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம்,இந்த பதினொரு பேரில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஆறுபேர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஐந்து பேர் என்றும் சொல்லப்படுகிறது.அதுமட்டுமின்றி வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்கள் என்ன என்பது பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை.முதல்வர் வேட்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் நடந்த போட்டியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


