பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது. மாா்ச் 27-இல் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி பேரவையில் அறிவித்திருந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இதுபற்றிக் கூறியதாவது, கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 9.45 லட்சம் மாணவா்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாா்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் தள்ளிவைக்கப்படும். இந்தத் தோ்வுகள் தமிழ்ப் புத்தாண்டு தினத்துக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கும் என்று சொல்லியிருந்தார்.

ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு இரத்தாகுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டபோது, 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை இரத்து செய்வது குறித்து முதல்வர் பழனிச்சாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

Leave a Response