தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு? – நடிகர் ராதாரவி பேச்சு

எஸ் என் எஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 29 அன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடையாரில் நடந்தது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டி. சிவா,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேசியதாவது,,,,

பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு ஒரு உன்னதமான மனிதர் என்றால் அது பொன்னார் மட்டும் தான். அவர் தான் என்னை இங்கு அழைத்து வந்தார். சொல்ல முடியாது அவரே தமிழக பி.ஜே பி தலைவராக வந்தாலும் வருவார். சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தது சந்தோஷம் என்றார்.

இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ்ப்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா. அவர் எனக்கு இசை அமைத்த பூவே செம்பூவே என்ற பாடல் ரொம்ப பிரபலம். இயக்குநர் இமயத்திடம் நடிக்க நிறைய வாய்ப்பு கேட்டிருக்கேன். இப்ப அவர் நடிக்க வந்துட்டார். விஜய் ஆண்டனி நல்ல நண்பர். அவர் இப்படியான படங்கள் தான் செய்ய வேண்டும். நான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் தான் அவருக்கு செட் ஆகும். அப்படி வரிசையில் தமிழரசன் படமும் இருக்கும்.

இந்த விழாவை வாழ்த்துக்கூடிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். நான் வெளிநாடு சென்ற போதும் என்னை ஒர்க் பெர்மிட் இல்லை என்று துரத்தி விட்டார்கள். அதைத் தான் இப்போது நம் நாட்டில் குடியுரிமைச் சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கிருக்கவனை வெளியிலே போகச் சொன்னாதானய்யா பிரச்சனை. இது கூட தெரியவில்லை. நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் இப்படம். அதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. தயவுசெய்து இப்படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள் என்றார்.

பல மாதங்களாக தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருக்கிறது. தலைவர் பதவிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் போட்டி போடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வானதி சீனிவாசன் இருக்கும் மேடையிலி பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக வருவார் என்று ராதாரவி பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Response