
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 18,2019) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி தவிர மற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது.
இதேபோல் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும், அங்கு காலியாக இருக்கும் தட்டாஞ்சாவடி சட்டசபைத் தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் நேற்று தேர்தல் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 822 பேர் போட்டியிட்டார்கள். 18 சட்டசபை தொகுதிகளில் 269 பேர் போட்டியிட்டார்கள்.
மாநிலம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஒருவர் பின் ஒருவராக வாக்குச்சாவடிக்குள் சென்று ஓட்டுப் போட்டனர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். முதல் முறையாக ஓட்டுப் போடும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர்.
ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.
சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த போது எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்கப் பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் தெற்கு ரதவீதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுப்பள்ளி வாக்குச்சாவடியிலும் ஓட்டுப் போட்டனர்.
இதேபோல் மற்ற கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப்போட்டனர்.
நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழகக் காவல்துறையினருடன் துணை இராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, துணை இராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதனால் ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய ஓட்டுப்பதிவு இடைவேளை இன்றி மாலை வரை நடைபெற்றது. சித்திரை திருவிழா காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாநிலம் முழுவதும் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
அதிகபட்சமாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 79.75 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.
மத்திய சென்னையில் 57.86 சதவீத வாக்குகளும், வட சென்னையில் 61.76 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சராசரியாக 73.68 சதவீத வாக்குகள் பதிவாயின.
ஓட்டு எண்ணிக்கை வருகிற மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
