
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தும் போட்டி என்றார் சரத்குமார். திடீரென சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு மார்ச் 26 காலை சென்ற சரத்குமார், அவரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தார்.
பின்னர், வெளியே வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
2 நாட்களுக்கு முன்பு துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் எனது இல்லத்துக்கு வருகை தந்து, தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து, நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையிலும், அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், இயக்கத்தின் முடிவில் இருந்து மாறுபட, மீண்டும் உயர்மட்ட குழுவை கூட்டி மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, அவர்கள் ஆமோதித்ததன் அடிப்படையில் இன்று முதல்-அமைச்சரை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணிக்கு எங்களது ஆதரவை தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை தந்திருக்கிறோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையாக உருவாக்கியதை அவர்களிடம் தேர்தல் கோரிக்கையாக வைத்துள்ளோம். இந்த தேர்தலில் அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். எனது கோரிக்கைகளில் சமத்துவம் நிலைநாட்டவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற நிலைபாட்டை எடுத்து தாங்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே எங்கள் ஆதரவை உங்களுக்கு தருகிறோம் என வலியுறுத்தி இருக்கிறோம்.
பிரசாரம் செய்வது என்று முடிவு எடுத்தபிறகு அது பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர் என பிரித்து பார்க்கவில்லை. இந்த கூட்டணி வெற்றி பெற நீங்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் என்னை சந்தித்து எங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அவர்களுக்காக பிரசாரம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன்.
சில சமயங்களில் தலைவர்கள் அச்சுறுத்தலாக பேசுவதன் விளைவாகத்தான் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் மீது சந்தேகம் வருகின்றது. சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக மத்திய அரசு இருக்கவேண்டும்.
வருங்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை மட்டுமல்லாமல், ‘புலவாமா’ தாக்குதலுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலையை பார்க்கும்போது வலிமையான ஆட்சி வரவேண்டும் என்ற அடிப்படையில், தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் ஆதரிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சரத்குமார் திடீரென இந்த நிலைப்பாட்டை எடுக்கக் காரணம், அவருக்கு அதிமுக தரப்பிலிருந்து சுமார் பத்துகோடி கொடுக்கப்பட்டதென்றும் அதன் காரணமாகவே அவர் அதிமுக ஆதரவு நிலை எடுத்தார் என்றும் சொல்லப்படுகின்றன.
இது உண்மையா?


