கர்நாடகாவில் காலாவுக்கு தடை – ரஜினியின் அரசியல் நாடகம்

ரஜினி கதாநாயகனாக நடித்துள்ள ‘காலா‘ படம் வருகிற 7-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த ‘காலா‘ படத்தை கர்நாடகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் உள்பட பல்வேறு கன்னட அமைப்பினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அந்த சபையின் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படம் கர்நாடகத்தில் திரையிடப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது கன்னட ரக்‌ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மன்னிப்பே கேட்டாலும், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் இனி வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.

தமிழக அரசியலில் ரஜினி ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். அவர் கர்நாடகத்தில் வாழ்ந்தவர் என்பதாலும் தமிழகத்தில் சம்பாதித்த பெரும் பணத்தை கர்நாடகாவில் முதலீடு செய்துள்ளார் என்பதும் அவர் மீதான கறையாக இருக்கிறது.

அந்தக் கறையைத் துடைக்க காலாவைப் பயன்படுத்துகின்றனராம்.

காலாவின் கர்நாடக உரிமை சுமார் 5 கோடி போகுமாம். அதை விட்டுக் கொடுத்தால், ரஜினியை கன்னடர்கள் எதிர்க்கிறார்கள் அதற்குக் காரணம் அவர் தமிழகத்தின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் என்கிற பரப்புரைக்காக மட்டுமே என்கிறார்கள்.

இந்த இணைய யுகத்தில் இது சாத்தியம் என்று நினைத்ததுதான் ரஜினியின் மிகப்பெரிய தோல்வி.

Leave a Response