
நீர்நிலைகளையெல்லாம் அழித்துவிட்டு குடிக்க நீர் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நிலை தமிழகத்தில் இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க என்கிற வேறுபாடின்றி நீர் நிலைகள் உள்ளிட்ட பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஈரோடு அருகே இருக்கும் கனிராவுத்தர் குளம் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீர்த் தேவைகளை நிறைவு செய்து வந்தது. இப்போது அந்தக்குளத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள். அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரே அக்குளத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை, குளம் மீட்பு இயக்கம் என்று ஒன்று அமைக்கப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. கனிராவுத்தர்குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, குளம் மீட்பு இயக்கத்தினர் சில மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஏற்கெனவே உரிய ஆவணங்களுடன் குளம் மீட்பு இயக்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேதாபட்கர் போன்றோரெல்லாம் அங்கு சென்று போராட்டம் நடத்தினர். அதன்பின்னர்,
இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பவும் ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக கோட்டாட்சியர் மேனகா தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.இந் நிலையில், சனிக்கிழமை குளத்தில் அவர் ஆய்வு செய்தார். அப்போது குளம் மீட்பு இயக்கத்தினர் ஆக்கிரமிப்புப் பகுதிகள் தொடர்பாக அவரிடம் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
ஆய்வின்போது குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நிலவன், கண்.குறிஞ்சி, திமுக வைச் சேர்ந்த பூபதி, கணியன்பாலன்,தி.வி.கழகத்தின் ரத்தினசாமி, த.ஓ.வி.இ கலைவேந்தன். தி.மு.க தோழா்கள் வி.பி. எஸ். பொன்னூசாமி, ஏ எல். தர்மராஜன், ஆட்டோ சேகர், நாராயணன், வெங்கடாச்சலம், மற்றும் முகமது யூனிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குளத்தை மீட்கும்வரை ஓயமாட்டோம் என்று குளமீட்பு இயக்கத்தினர் உறுதியோடு இருக்கின்றனர்.


