ஆச்சரியம் ஆனால் உண்மை–தீர்ப்பு வருகிறவரை ஜெயலலிதாவின் பிணையை நீட்டிக்கக் கோரிய திமுக வழக்குரைஞர்.


வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 2014 அக்டோபர் 17-ந் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. பின்னர் டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.
2014 டிசம்பர் 18-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவின் படி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பிணை இன்று (ஏப்ரல் 18,சனிக்கிழமை) முடிவடைய இருக்கும் நிலையில், அவர்களுக்கான பிணையை நீடிப்பது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
அப்போது. ஏற்கனவே பவானிசிங் நியமனம் குறித்த வழக்கில் 2 நீதிபதிகள் தங்களுக்குள் முரண்பட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். இனி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் மீது எப்போது தீர்ப்பை வெளியிடும் என்பதை நாங்கள் கூற முடியாது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பதிவாளர் பட்டேல் மூலமாக, தன்னுடைய தீர்ப்பை வெளியிடுவதற்கு மேலும் காலஅவகாசம் கோரி கடிதம் எழுதி இருக்கிறார். தற்போது இந்த வழக்கு குறித்து நிலவும் அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் தீர்ப்பு வழங்க முடியாத காரணத்தால் மேலும் ஒரு மாத காலஅவகாசம் கோரி இருக்கிறார். அவருடைய கோரிக்கை நியாயமாகப் படுவதால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பை வெளியிடும் காலஅவகாசத்தை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீடிக்க அனுமதிக்கிறோம் என்று சொன்னார்களம்.

அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் வந்திருந்த மூத்த வழக்குரைஞர் அந்திஅர்ஜுனா நீதிபதிகளிடம், “அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்கக்கோரும் மனுவின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நீதிபதிகளின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் அந்த வழக்கின் மீதான விசாரணையை முடிக்க முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “அப்படி அந்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவில்லை என்றால் மீண்டும் பிணை நீடிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுமா? அல்லது இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியிடப்படுமா? என்றும் தெரியவில்லை. இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் கால நீடிப்பு ஏப்ரல் 30-ந் தேதி என்பதை சிறிது காலம் அதிகமாக நீடித்து, எதுவரை மொத்தமாக ஜாமீன் நீடிக்கப்படும் என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்” என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவும், நீதிபதி அருண் மிஸ்ராவும் சிறிது நேரம் கலந்து ஆலோசித்த பிறகு, “இந்த கோரிக்கை நியாயமானதாக தோன்றுகிறது. எனவே கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை வழங்கும் காலஅவகாசத்தை வருகிற மே 12-ந் தேதி வரை நீடிக்க அனுமதிக்கப்படுகிறது. மே 12-ந் தேதிக்கு மேல் ஒருவேளை தீர்ப்பு வெளியிட முடியாத நிலையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீதிபதி குமாரசாமி காலஅவகாசம் கோரினார் என்றால் அதனை நீடிக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு வெளியாகும் வரை, அதாவது வரும் மே 12-ந் தேதி வரை, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான ஜாமீன் நீட்டிக்கப்படுவதாக கூறினார்கள்.
இந்தச் செய்தி இன்று எல்லாப்பத்திரிகைகளிலும் வெளியாகிருக்கிறது. இதில் தீர்ப்பு வருகிறவரை ஜெயலலிதாவுக்கான பிணையை நீட்டித்துவிடலாமே என்று திமுக வழக்குரைஞர் கேட்டதும் இந்த கோரிக்கை நியாயமாகப் படுகிறது என்று நீதிபதிகள் சொன்னதையும் வைத்து, என்ன நடக்குது இங்கே என்று அனைவரும் வியந்துகொண்டிருக்கின்றனர்.

Leave a Response