
விஷ்ணு, ரம்யாநம்பீசன் நடித்த குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கியிருக்கும் அடுத்தபடம் எங்ககாட்டுலமழை. வெளியீட்டுக்குத் தயாராகிவிட்ட இந்தப் படத்தில் சென்னையில்ஒருநாள் படத்தில் நடித்த மிதுன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக சுருதிராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். படத்தில் இன்னொரு நாயகன் போல தேசியவிருது பெற்ற அப்புக்குட்டி இருக்கிறார். இவர்கள் இருவரையும் விட முக்கியமாகப் படத்தில் ஒரு நாய் நடித்திருக்கிறதாம். அந்த நாய், பஞ்ச் வசனமெல்லாம் பேசும் என்று சொல்கிறார் அதற்கான குரலை ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ புகழ் ஆதவன் பேசியிருக்கிறார்.
அந்த நாய் எங்கள் படத்தில் 40 நாட்கள் நடித்திருக்கிறது. படத்தில் வரும் நாயின் எண்ணவோட்டங்கள் செம ஜாலியாக இருக்கும் என்கிறார் இயக்குனர். நாய்க்கு குளிர்சாதன வசதி கொண்ட அறை, மகிழுந்து கொடுத்தார்களாம். அதற்கான உணவு, கோழிக்கறி, பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) உயர்தர மிட்டாய் (5 ஸ்டார் சாக்லேட்) சாப்பிட்டவுடனே ஓய்வு என்று நாய்க்கு அரசமரியாதை கொடுத்திருக்கிறார்களாம்.
மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு நாயகன் மற்றும் அவருடைய நண்பன் ஆகிய இருவரும் சென்னைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு நாயும் அவர்களோடு சேர்ந்துகொள்கிறதாம். இவர்கள் மூவரும் சென்னைக்குள் சந்திக்கிற நிகழ்வுகள்தாம் படம்.
இந்தப்படத்தின் திரைக்கதை முழுக்க நகைச்சுவை கலந்து எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் படமாக இது இருக்கும் என்கிற உறுதி தருகிறார் இயக்குநர்.
ஆதலால்காதல்செய்வீர் படத்தின் ஒளிப்பதிவாளர் சூர்யா இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்தப்படத்தின் வசனங்களை எழுதிய கிளைட்டன் இந்தப்படத்தின் வசனங்களையும் எழுதியிருக்கிறார். இரண்டுபாடல்கள் பாடல்களை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று படமாக்கியிருக்கிறார்களாம்.
