மெர்சல் பெயர்ச் சிக்கல், தயாரிப்பாளர் ராஜேந்திரன் சொல்வது என்ன?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளார்கள். எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக விருப்பங்களையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பெயரைப் பயன்படுத்தத் தடை கோரி தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு விளக்கம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் தனது மகனைக் கதாநாயகனாக வைத்து ‘மெர்சலாயிட்டேன்’ என்ற பெயரில் படமெடுக்கத் தயாராகியிருக்கிறார்.

இதற்காக,மெர்சலாயிட்டேன், நான் மெர்சலாயிட்டேன் ஆகிய பெயர்களைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் மெர்சல் என்ற பெயரைப் பதிவு செய்யக்கேட்டபோது மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார் ராஜேந்திரன்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தில், மெர்சல் என்று பெயர் வைத்தால் என்னுடைய படம் பாதிக்கப்படும்,பெரும் பணம் முதலீடு செய்திருப்பதால் தான் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும் என்று அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response