மகா மகா- திரைப்படவிமர்சனம்


ஆஸ்திரேலியாவிலுள்ள ட்ரால்கா என்கிற இடத்துக்கான தமிழ்அர்த்தம்தான் மகாமகா, ஒரு வசனத்தில் இதைச்சொல்கிறார் இயக்குநரும் நாயகனுமான மதிவாணன். தமிழ்நாட்டிலிருந்து அங்கு வேலைக்குச் செல்லும் நாயகன் மதிவாணனுக்குப் போன இடத்தில் ஆஸ்திரேலியப்பெண்ணுடன் காதல். இவர்கள் காமலித்துககொண்டிருக்கும்போதே அந்தப்பெண்ணைக் காணவில்லை என்று காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடையும் நாயகன் காதலி பற்றிய உண்மைகளைத் தேடிப்போவதுதான் படம்.
கதை,திரைக்கதைவசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் மதிவாணன், மிகஇயல்பாக நடித்திருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அது சரியாக இருக்கிறது. உணர்ச்சிகளைக்காட்டவேண்டிய இடங்களிலும் அவர் சாதாரணமாகவே இருக்கிறார். அது பொருத்தமாக இல்லை.
காதலியாக நடித்திருக்கும் மெலிசா, பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். அவர் பரதநாட்டியம் அடும்காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அவருடைய முன்கதை பெரும்சோகம். ஓரிருவிநாடிகளுக்குள் தந்தை தாய் ஆகிய இருவரையும் அவர் இழக்கும் காட்சி ஆஸ்திரேலியாவைப் பற்றி பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நாயகனின் தோழியாக நடித்திருக்கும் இந்திரா கவனிக்கவைக்கிறார். அழகாக இருக்கிறார். நன்றாக நடன்ம ஆடுகிறார். சில இடங்களில் டாப்ஸியை நினைவுபடுத்துவதுபோல அவருடைய தோற்றம் இருக்கிறது. தமிழ்ப்படங்களில் இவரைப் பயன்படுத்த இயக்குநர்கள் தயங்காமல் முன்வரலாம்.
நிழல்கள் ரவி, மீராகிருஷ்ணன், அனுபமாகுமார் அகியோர் அவர்களுக்குரிய வேடங்களைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். அனுபமாகுமார் சட்டென்று எடுக்கும் முடிவும் அதன் விளைவுகளும், கடல்கடந்து போனாலும் எவ்வளவு வசதிவாய்ப்புகள் வந்தாலும் அடிப்படை மனநிலை மாறாமல்தான் இந்தச்சமுதாயம் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக அனுபமாகுமாரின் பாத்திரப்படைப்பு இருக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்களா?
ஆஸ்திரேலியாவிலேயே மொத்தப்படத்தையும் எடுத்திருந்தாலும் இதுவரை தமிழ்த்திரையில் பார்த்த ஆற்திரேலியாவைக் காணமுடியவில்லை. அங்குள்ள புறநகர்ப்பகுதிகள் எப்படியிருக்கின்றன என்பதை இந்தப்படத்தின் மூலம் அறியமுடிகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அபார்ஜின் பழங்குடியினர் வாழ்க்கைமுறையும் தமிழ்ச்சமுதாயத்தின் வாழ்க்கைமுறையும் ஒத்திருக்கிறது என்று உண்மையிலேயே பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்தை இந்தப்படத்தில் மெலிசா பாத்திரத்தை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். வாழ்க்கைமுறை மட்டுமின்றி அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கும் இடங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஏதோவொரு கிராமத்தில் எடுத்துவிட்டு ஆஸ்திரேலியா என்று சொல்லிவிட்டார்களோ என்று நினைக்கிற மாதிரி இருக்கிறது.
இளையராஜாவின் அண்ணன் பாவலர்வரதராசனின் மகன் பாவலர்சிவா இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அகரமோடு ழகரம் சேர்ந்த தமிழ் அழகு என்கிற பாடல் நன்று. அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் நன்று. பின்னணிஇசை பல
இடங்களில் இளையராஜாவை நினைவுபடுத்துகிறது. அவருடைய பின்னணிஇசையை அப்படியே பயன்படுத்திக்கொண்டுவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அறிவயில்புரட்சிகள் நாள்தோறும் நடந்துகொண்டிருந்தாலும் மனிதசக்கிதயை முழுயைமாக அளந்து எடுக்கமுடியவில்லை என்பதை இந்தப்படத்தில் நாயகனின் பாத்திரப்படைப்பின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதிவாணன். திரைக்கதையில் சுவைகூட்டியிருந்தால் கவனிக்கத்தக்க படமாக இருந்திருக்கும்.

Leave a Response