அப்துல்கலாம் பேரன் மீது காவல்துறையில் புகார் கொடுத்த இந்து மத அமைப்பு

இராமேசுவரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மணிமண்டபத்தில் அவரது சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டிருந்த இடத்தில், குரான் மற்றும் பைபிள் ஆகிய நூல்கள் வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

இராமேசுவரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம் பாட்டுக்கழகம் சார்பில் பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மணிமண்டபத்தை ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

மணிமண்டபத்தினுள் உள்ள அப்துல்கலாம் சிலை வீணை வாசிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை எழுந்ததை அடுத்து, ஜூலை 30, காலை அப்துல்கலாமின் சிலை அருகே பைபிள் மற்றும் குரானை அவரது அண்ணன் பேரன் சலீம் வைத்தார். ஆனால், சிலமணி நேரங்களில் குரான், பைபிள் அங்கிருந்து அகற்றப்பட்டு சிலைக்கு பின்புறம் உள்ள கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டன.

அப்போது சலீம் செய்தியாளர்களிடம் கூறும்போது, கலாம் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைவருக்கும் பொதுவானவர். இதை அரசியலாக்க வேண்டாம். மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் பைபிள் மற்றும் குரானை அவரது சிலை அருகே வைத்தேன் என்றார்.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாமின் நினைவிடத்தில் பகவத்கீதை நூல் அருகில் குரானையும், பைபிளையும் வைக்க சலீமுக்கு உரிமையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன் கூறியதாவது: கலாம் சிலை அருகில் அவருக்கு பிடித்த பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது. அரசிடம் அனுமதி பெறாமல் குரான், பைபிள் நூல்களை சலீம் வைத்துள்ளார். கலாமின் நினைவிடம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. எனவே சலீம் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றார்.

Leave a Response