தமிழக அஞ்சல்துறையில் அரியானாவை சேர்ந்தவர்கள் முதன்மை பெற்றது எப்படி? – பழ.நெடுமாறன் கேள்வி


தமிழக அஞ்சல் துறையில் பிற மாநிலத்தவர் திணிப்பு தொடர்பாக பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழ்நாடு அஞ்சல் வட்டாரத்திற்குத் தேவையான ஆட்களை எடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழ்த் தேர்வில் முதன்மை இடங்களைப் பெற்றிருப்பது பெரும் ஐயத்திற்கு இடமளிக்கிறது. தேர்வு எழுதப்பட்ட தாள்களை மாற்றியோ அல்லது மதிப்பெண் போடுவதிலோ தவறு நடைபெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அஞ்சல் துறைக்குத் தமிழர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் நியமிக்கப்படுவதும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
தொடர் வண்டித் துறையிலும் தமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டுத் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகளில் தமிழர்கள் மட்டுமே வேலைக்கு நியமிக்கப்பட வேண்டும். பிற மாநிலத்தவரை
திணிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்துகிறேன் என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Leave a Response