இயக்குனர்கள் சங்கம் பதிவு ரத்து ;; குழப்பத்தின் பின்னணி இதுதான்..!


கடந்த நான்கு ஆண்டுகளாக சங்கத்தின் பதிவை புதுப்பிக்கத் தவறியதால் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பதிவை, சங்கங்களின் பதிவு துறை சமீபத்தில் ரத்து செய்துவிட்டது. இயக்குனர் சங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய காலத்தில் இ-பார்ம்களை பதிவு செய்யாததால் சங்கப்பதிவு ரத்தாகியுள்ளது. இதைப்பற்றி தகவல் தெரிந்தவுடன் சங்க பொதுச்செயலாளர் ஆர்கே.செல்வமணி, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.

அப்போது இ-பார்ம்களை புதுப்பிக்காத நினைவூட்டல் கடிதங்களும், இ-பார்ம்களை புதுப்பிக்கவில்லை என்ற சோகாஸ் நோட்டீசும் இயக்குனர் சங்கம் முன்பு வடபழனியில் இயங்கி வந்த பழைய வாடகை அலுவலக விலாசத்திற்கு அனுப்பப்பட்டு திரும்பி வந்தது தெரியவந்ததாம்.

ஆனால் இதில் என்ன காமெடி என்றால் 2013 -ஆம் ஆண்டு ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கான அழைப்பு கடிதங்கள் அனைத்தும் தற்போது இயக்குனர் சங்கம் வளசரவாக்கத்தில் இயங்கிவரும் புதிய அலுவலக விலாசத்திற்கு வந்துள்ளன. ஆனால் தற்போது 2016 -ல் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்கள் மட்டும் பதிவுத்துறையால் தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டுள்ளன.

இயக்குனர் சங்க செயற்குழு கூடி நடந்த தவறுகளை விளக்கமாக எழுதி எங்கள் சங்கத்தின் ”ரத்து செய்த ஆணையை” ரத்து செய்திட வேண்டும் என வேண்டுகோள் கடிதம் தொழிலாளார் நல ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக நிர்வாக காரணங்களுக்காக சங்கப்பதிவு ரத்து ஆவது பல்வேறு சங்கங்களில் பலமுறை நிகழ்ந்துள்ளது. அவ்வாறு ரத்தான சங்கங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன்.

Leave a Response