ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணன் செய்தித்தாள்களே படிப்பதில்லையா?-நாம்தமிழரின் கேள்வி

 

அண்மையில் சீமானிடம் பேட்டி எடுத்து. தமிழின வலியோடு அவர் சொன்ன சொற்களை, நக்கல் நய்யாண்டிப் பேட்டிகளின் வரிசையில் சேர்த்து இதுவும் ஒரு நகைச்சுவை என்பது போல வெளியிட்டு தமிழினத்தின் மீதான வன்மத்தை வெளிப்படுத்தியிருந்தது ஆனந்தவிகடன்.

அதனால் ஏற்பட்ட நாம்தமிழர்கட்சியினரின் ரணம் ஆறாத நிலையிலும் விகடன் நிறுவனர் பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டதோடு கட்சியின் பொதுக்குழுவில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதோடு அவருடைய உடலத்துக்கும் நேரில் சென்று வணக்கம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்தவார இதழிலும் சீமானைக் கேலி செய்திருப்பதோடு நாம்தமிழர்கட்சியின் செயல்பாடுகளை முற்றிலும் மூடி மறைப்பது போல எழுதியிருந்தார்கள். அதற்கு எதிர்வினையாக நாம்தமிழர்கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் எழுதியுள்ள கடிதம்…..

ஆனந்தவிகடன் ஆசரியருக்கு,

சென்ற வாரம் வந்த விகடன் இதழில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியை உங்கள் இதழின் ஆதர்ச நையாண்டி நாயகர்கள் பவர் ஸ்டார், ஆதீனம் பேட்டிகளோடு ஒன்றாக வெளியிட்டிருந்த பொழுது சரி இது எதேச்சையாக நடந்திருக்கும் என்று எண்ணினேன்.. ஆனால் இந்தவார இதழில் நையாண்டி பக்கத்தில் ஆடு மேய்ப்பவர் படத்தில் தலையை மட்டும் சீமானாக மார்பிங் செய்து போட்டதும் தான் திட்டமிட்டு வேலை செய்வது தெரிந்தது. அவர் உங்கள் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தது தான் தவறே ஒழிய உங்கள் பத்திரிகையில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். என்னதான் நீங்கள் பிம்பத்தை சிதைக்க முற்பட்டாலும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த பொதுக்குழுவில் உங்கள் நிறுவனர் அய்யா பாலசுப்ரமணியனுக்கு அகவணக்கம் செலுத்தும் மனிதத்தன்மை நாங்கள் கொண்டிருக்கிறோம். விகடன் நையாண்டி செய்து எழுதுவது பெரிய பிரச்சனையில்லை. ஆனால் கடந்த இதழில் முதல் பக்கத்தில் “நியூஸ் டார்லிங்க்ஸ்.. கொஞ்ச நாளாக சத்தத்தையே காணோம்” என்று எழுதியிருப்பதில் ஒரு கருத்து இருக்கிறது.

இதுவும் எங்கள் நன்மை கருதியல்ல உங்கள் நன்மை கருதியே. வாரமொருமுறை வரும் மக்கள் நன்மதிப்பை பெற்ற ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியர் என்ற யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் அடையமுடியாத பதவியை மற்றவர்களை விட கம்மியான அனுபவமுள்ள உங்களுக்கு கொடுத்திருக்கிறார் எனும்பொழுது நீங்கள் அதில் சரியாக இருக்க வேண்டும் என்ற நன்மை கருதியும், பல விசயங்களை ஒருவாரத்தில் அலசி ஆராய்ந்து செய்தி செய்தி வெளியிட வேண்டிய நீங்கள் கடந்த ஒரு மாதமாக செய்தியே படிப்பதில்லையோ என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த கடிதம்.

கடந்த ஒரு மாதத்தில் (நவம்பர்) மட்டும் தமிழ்நாடு முழுக்க நாம் தமிழர் கட்சி 70க்கும் மேல் கூட்டம்/ஆர்பாட்டம் போன்ற நிகழ்வுகளை நடத்திருக்கிறது, அதில் நீங்கள் குருப்பிட்டிருக்கும் “சத்தத்தை காணாத” சீமான் 10 கூட்டங்களுக்கு மேல் பேசியிருக்கிறார்.

நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமாரியில் குமரி மண் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளில் “தமிழக பெருவிழா” பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. அதில் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதை பற்றிய செய்தி அம்மாவட்ட பத்திரிக்கைகளில் வந்தது.

நவம்பர் 3ஆம் தேதி சீக்கிய இனப்படுகொலையை கண்டித்து டெல்லியில் தல்கல்சா சீக்கிய அமைப்பு முன்னெடுத்த தேசிய இனங்களின் ஒன்று கூடல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு தமிழகத்திலிருந்து அழைக்கப்பட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். காஸ்மீரிய ஹுரியத் முன்னணி தலைவர் செய்யது அலிசா கிலானி போன்ற தலைவர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் தமிழர் பிரதிநிதியாக சீமான் கலந்துகொண்டார். அது பல வடஇந்திய நாளிதழ்களில் செய்தியாக வந்தது. சில சர்வதேச ஊடகங்களிலும் வந்தது. தமிழ் தொலைக்காட்சிகளிலும் வந்தது. தமிழ் ஹிந்துவில் ‘பிரிவினைவாதிகளுக்கு நடுவே சீமான்’ என்று வழக்கம் போல் செய்தி போட்டது.

நவம்பர் 6 ஆம் தேதி அன்று ஐந்து மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அந்த செய்தியும் பல தமிழ் நாளிதழ்களில் தொலைகாட்சிகளில் வந்தது.

நவம்பர் 10 ஆம் தேதி இலங்கை வடக்குமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் இந்திய பயணத்தில் அவர் கொடுத்த பேட்டியை கண்டித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையையொட்டி தந்தி டிவியில் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியில் சீமானின் நேர்காணல் எடுக்கப்பட்டது. அது இருமுறை மறு ஒளிபரப்பானது.

தமிழகம் முழுக்க ஒருவாரம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. சென்னை குன்றத்தூரில் 21 ஆம் தேதி தொடங்கிய நிகழ்வு திருபெரும்புதூரில் 27 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதில் ஒரு நிகழ்வாக தமிழகம் முழுக்க நடந்த இரத்ததான முகாமில் 5000 யூனிட்களுக்கு மேல் எங்கள் கட்சியினர் குருதிக்கொடை அளித்தனர். பல ஆயிரம் மரக்கன்று நடப்பட்டது, பல மருத்துவ முகாம்கள் நடந்தது. அதை பற்றிய செய்திகள் பல பத்திரிக்கைகளில் வந்தது.

முக்கியமாக 26 ஆம் தேதி திருவெற்றியூரில் நடந்த தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் “வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா” என்னும் கவிதை நூலை வெளியிட்டு சீமான் பேசியது தான் “ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றியது”. பேசிய மற்றவையை எல்லாம் விட்டுவிட்டு இந்த விசயத்தை அனைத்து பத்திரிக்கையும் செய்தியாக்கியது. தெலுங்கு சாக்க்ஷி பத்திரிக்கை கூட படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது. இப்பொழுது நீங்கள் வெளியிட்டிருக்கும் பேட்டியிலும் அதைவைத்து ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இப்படி சமீபத்தில் பேசியதை வைத்து கேள்வியும் கேட்டுவிட்டு முன்பக்கத்தில் சத்தத்தையே காணோம் என்கிறீர்கள்.

கடந்த மாதத்தில் மட்டும் இத்தனை நிகழ்வுகள் இத்தனை செய்திகள் சீமான் அண்ணன் பற்றியும் நாம் தமிழர் கட்சி பற்றியும் வந்திருக்க “சத்தத்தையே காணோம்” என்று நீங்கள் போட்டிருப்பதற்கான காரணம் நீங்கள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் பார்க்காமல் விட்டுவிட்டீர்களோ என்ற சந்தேகம் ஒருபுறமிருந்தாலும், உங்கள் எண்ணத்தை கணிக்கமுடியாமல் இல்லை. ஜூவி தான் தாயகத்தில் இருந்து வெளிவருகிறது என்று ஊர் முழுக்க பேச்சாக இருக்கிறது ஆவியை அங்கே மாற்றிவிட்டீர்களா என்ன?. சீமான் அண்ணனை இப்படி நையாண்டி கேள்விகளால் அசிங்கபடுத்த எண்ண உங்களுக்கு ஏதோ ஒரு அரசியல் காரணம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் பாவம் தங்கர்பச்சான் உங்களுக்கு என்ன செய்தார் .அவரின் கூடு இயக்கத்தை பற்றி உங்கள் விகடனில் பணம் வாங்காமல் விளம்பரமல்லவா செய்தீர்கள் என்ன ஆயிற்று இப்பொழுது?.

நீங்கள் விகடனுக்கு ஆசிரியரானதும் தமிழன் ஒருவன் ஆசிரியராகிவிட்டான், நம்ம தம்பி ஆசிரியராகிவிட்டான் என்று சீமான் அண்ணன் சொன்னதும், சிறையில் அவர் இருந்த பொழுது நீங்கள் அவருக்கு எழுதிய நெகிழ்ச்சியான கடிதமும் நான் அறிவேன். அப்போதைய அன்பையும் இப்போதைய வன்மத்தையும் ஒரு சேர நினைக்கும் பொழுது கவலை தான்.

ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும் என்ற உங்கள் புகழ்பெற்ற வாசகத்தை கொஞ்சம் மாற்றி “தமிழனாக இருப்பதன் கஷ்டம் தமிழனே எதிர்க்கும் பொழுது தான் தெரியும்” என்ற செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்பும்..
–பாக்கியராசன்..

Leave a Response