சாகும்வரை உண்ணாவிரதம் தொடருகிறது, தமிழ் மக்கள் கண்டுகொள்ளவில்லையே – இயக்குநர் வேதனை

1.காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைத்திடுக

2.உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி தமிழகத்துக்கு உரிமையான நீரை உடனே வழங்குக

3.அணைகளின் மீதான மாநில அரசின் உரிமைகளை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றிடுக

4.கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு உடனே நட்ட ஈடு வழங்குக

5.அப்பாவித் தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை உடனே கைதுசெய்க

6.கர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடுக

7.அணை பாதுகாப்பு மசோதாவை இரத்து செய்க

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். செப்டம்பர் 17 காலை தொடங்கிய உண்ணாவிரதம் மூன்றாவது நாளாகத் தொடருகிறது.

இது தொடர்பாக இயக்குநர் கெளதமன் எழுதியுள்ள பதிவில்,

காவேரியில் நமக்கிருக்கும் உரிமையை மீட்டெடுக்க நம் மாணவ தம்பிகள் பதிமூன்று பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கி இன்றோடு மூன்றாம் நாள். தீர்வு வழங்க கூடிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது தாங்க முடியாத வேதனை என்றால் அதைவிடவும் பெருத்த வேதனை யாருக்காக உயிரை பணயம் வைத்து போராடுகின்றார்களோ அந்த ஈனமானம் கெட்ட தமிழினம் கூட வந்து அவர்களை பார்க்காததுதான் மிகப்பெரிய வன்முறை.

அவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு எங்குமே இடம் கிடைக்காத நிலையில்தான் எழும்பூரில் உள்ள தாயகத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை ஓருசில காட்சி ஊடகங்களை தவிர பெரிதாக எவரும் ஓளிபரப்பவில்லை. பத்திரிகைகள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனாலும் எங்கள் தம்பிகள் உறுதியோடு போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் எல்லோருக்குமானது. மாணவ மாணவிகளே வகுப்புகளை துறந்து வீதிக்கு வந்து போராடுங்கள். பெற்றோர்களே அவர்களுக்கு துணை நின்று குரல் கொடுங்கள். இன்று நீங்கள் போராடவில்லையென்றால் தமிழ் நாடு நீரில்லாத பாலைவனமாகி எதிர்காலத்தில் தமிழ் மண்ணும் தமிழினமும் மண்ணோடு மண்ணாக புதையும்.

மாணவர் புரட்சி வெளிக்காட்டும்
தமிழின உரிமை வெல்லட்டும்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response